உழவன்
கவிதைப் போட்டி - உழவன்
உழவன் - கவிதை.
விவசாயி கண்களில் நிரந்தர நீரோட்டம் - அவர்களின்
விடியாத இரவு ஒரு கண்ணோட்டம்.
இதோ உழவனின் வாழ்க்கை.... அவன் வார்த்தைகளிலே....
வெவசாயீ கதை கேட்டா வெளஞ்ச நெலம் அழுகுமையா
சம்சாரி கதை கேட்டா சராச்சரமே கலங்குமையா
எனக்கொரு பொண்டாட்டி ஏழு பிள்ளையையா
கடைசிப் பிள்ளைக்கு கால் வயசு ஆகுதையா
மூத்த பையன் தானிருக்க மூணு பொண்ணு சமைஞ்சிருக்கு
மொடக்கிக் கூட படுக்க முடியாத ஒரு வீடிருக்கு
பள்ளிக்குப் போற பையன் பைக்கட்டு கேக்கயில
சாக்குலதான் பாதி பைக்கட்டா மாறுதையா
கன்னிப் பொண்ணு எல்லாம் ஜாக்கட்டுக் கெக்கயில
சாக்கத் தர முடியலய்யா தகுந்த வழி தெரியலய்யா
நா உழுத நெலமெல்லாம் நல்லபடி வெளஞ்சிருக்கு
நாம்பெத்த மக்களுக்கு வயித்துக்கு கஞ்சியில்ல.
போரடிச்ச நெல்லெல்லாம் போயிருக்கும் கெடங்குக்கு
மாரடிச்சு மாரடிச்சு எங்க மாரெல்லாம் காய் காய்க்கும்
சுத்தம் சோறு பொடுமின்னு சொன்னாங்க பெரியவுங்க
சுத்தம் .....சோறு ......போடுமாமாம் .....சொன்னாங்க
எங்க வீடு சுத்தம் ,அடுப்பு சுத்தம், சட்டி எல்லாம் சுத்தமய்யா
சோறுதான் எங்களுக்கு சொந்தமாக மறுக்குதய்யா.
கடைக்குட்டிக்கு மூத்த பையன் கால் மொளச்ச பையனய்யா
கால் மொளச்ச பையனுக்கு பல் மொளைக்கக் கூடாதையா
பக்கத்து வீட்டு பலகாரத்த அவன் பவ்வியமாப் பாக்கையில
பார்த்து விட்டுத் தன்னோட பவள வாய காட்டயில
பொழப்பே வேறுக்குதய்யா போற வழி தெரியலைய்யா.
பிஞ்சு போன கூரையத்தான் பிரிச்சு மேய முடியாம
நஞ்சு போயி நா இருக்க பஞ்சு மிட்டாய் வேணுமின்னு
பிஞ்சுப் பையன் கெக்கயில நெஞ்சே வெடிக்குதய்யா.
என்ன தப்பு நாங்க செஞ்சோம் இந்த பொழப்பெதுக்கு ?
வெளைய வச்சு தந்ததுக்கு உலகம் தந்த சீதனமா?
மாட்டுக்குப் பசிச்சாலும் இந்த பாவி மனசு தாங்காதய்யா
எங்க கூட்டமே பசிச்சிருக்க ஒலகம் இங்கே தூங்குதய்யா
தரித்திரந்தான் எங்களுக்கு அந்த சாமி தந்த வரந்தானோ ?
தற்கொலைதான் எங்களுக்கு பூமி தந்த பெரும் பரிசோ?
வெவசாயீ எல்லாரும் இதுபோல உசிர வெறுத்துட்டா
வெளச்சல் இல்லாத வெறும் நெலமா ஆகுமய்யா
பணத்துக்கும் பதவிக்கும் பழகிப் போன மனுசக் கூட்டம்
கொத்துக் கொத்தா சாகுமையா கொலமழிஞ்சு போகுமையா
பத்தினி சாபமில்ல! அது பட்டினி சாவு தானய்யா!
உழுதவன் சாபமும் இல்ல! இந்த நெலத்தோட சாபமய்யா!
மாமுகி.