உழைப்பே உயர்வு மே தினம்
அனுதினமே உடல் உழைத்திடுமே! - அந்த
ஆதி வர்க்கத்தின் ஒருதினமே!
ஊரெங்குமே பரவி இருந்திடுமே! - நல்ல
உழைக்கும் வர்க்கத்தின் பொன்தினமே!
உழுதிடுமே வயல் விதைத்திடுமே! - நாம்
உயிர்வாழ தன்னைக் கொடுத்திடுமே!
உலகாலும் நின்று அரசாலும் - பல
உயர்ந்த வர்க்கத்தின் உயிர்உரமே!
மரம்நடுமே! கல் உடைத்திடுமே!- பளிங்கு
மாளிகையும் கட்டித் தந்திடுமே!
பசியாற்றிடுமே! பஞ்சம் ஓட்டிடுமே!- இந்தப்
பார்முழுதும் நலம் அளித்திடுமே!
சுறுசுறுப்பாய் தினம் இருந்திடுமே! - வரும்
சுகங்களை பிறருக்குத் தந்திடுமே!
இதயத்தில் வேதனை சுமந்திடுமே!- இருந்தும்
இன்முகம் கொண்டு பேசிடுமே!
கைவலித்திடுமே உடல் இளைத்திடுமே!- அட
கடமையே கண்ணாய் செய்திடுமே!
காலையிலே தினம் விழித்திடுமே!- உழைக்க
காக்கைக் குருவிபோல் பறந்திடுமே!
வியர்வைத் துளிகளை பலியிடுமே!- அதில்
வேதனை மறந்து வாழ்ந்திடுமே!
உழைப்பில் உப்பின் மணம்வருமே!- இந்த
உலகமே உனது அர்ப்பணமே!
சோகத்தை நெஞ்சில் சுமந்திடுமே!- அட
சொர்க்கத்தை மண்ணில் விளைத்திடுமே!
சேற்றில் இறங்கி மிதித்திடுமே! - அது
சோற்றுப் பஞ்சத்தை தீர்த்திடுமே!
புல்லிலும் புதுமைப் படைத்திடுமே! - சிறு
கல்லிலும் பலகலை வடித்திடுமே!
கலப்படம் இல்லாக் கந்தகமே!- நீ
கண்திறந்தால் எங்கும் வெந்திடுமே!
அகிலத்தைத் தாங்கிடும் வேரினமே!- - நீ
அதிகம் வளராத கோபுரமே!
உப்பினமே தினம் உருகிடுமே!- எங்கும்
உயர்ந்தஇனம் உன்னை நாடிடுமே!
பொய்யினம் விரும்பா மெய்யினமே!- நீ
புறப்பட பாய்ந்தோடும் புலியினமே!
உனக்கெனவே இந்த ஒருதினமே!- நீ
உயர்ந்திட ஏந்திடு ஆயுதமே!
வல்லினமே! இனிய சொல்லினமே! - எங்கும்
மேல்லினம் உன்னால் வாழ்ந்திடுமே!
இடையினமே! இன்பம் தருமினமே! - உன்னைக்
கடையினமாய் கண்கள் கண்டிடுமே!
ஒப்பெதும் அற்ற உயரினமே!- நீ
உறங்கிட ஓய்ந்திடும் வையகமே!
உயிரினம் போற்றும் உயர்குலமே! - உன்
உயர்வை கூறிடும் மேதினமே!
எழுதியவர்
பாவலர் ..பாஸ்கரன்