வலியோடு வெற்றி

கண்ணுக்கு சுமையானது
இமைகள்...
இசைக்கு சுமையானது
ஸ்வரங்கள்
ஆம்.. இளைஞர்க்குத் தோல்விகள்
சுமையாய்ப் போனதால்
மோகனம்கூட
முகாரியாய்ப் போயின.
இளைஞனே...
சோகச்சிதறலுக்கு சோரம் போகாமல்
சோர்ந்துதானே போய்விட்டாய்…
சோகமெதற்கு..?
புதிய வேள்விகளை
வலிகளோடு முன்னிறுத்து.
வரும் வலிகளோடு
வெற்றியும் உனதாகும்.
சூழ்நிலைச் சுமையால்
சோகங்களை வேர்முடிச்சாக்கி
மனதில் விரக்திச்செடி வளர்ப்பதேன்...?
அவற்றை வேரோடு
வேரறுருக்க வழிகொள்...
புரிந்து கொள்
வலிகள் என்பது உடலுக்கு மட்டும்தான்
உன் உள்ளத்துக்கு அல்ல.
வலிகள் பெரிதாயினும்
அதனோடு வரும்
வெற்றியும் பெருவெற்றிதான்...
உனது வாலிபச்சுருதியில்
மீட்டவேண்டிய
வெற்றி இராகங்கள் எத்தனை..?.
இன்னும் எத்தனை எத்தனையோ..!
அதை விடுத்து
தோல்விகள் வலிகளென்று
நீயெதற்காய்
சோககீதம் இசைக்கிறாய்... ?
வழியெங்கும் வலிகளானாலும்
வலியோடு வரும் வெற்றிதான்
வாழ்க்கை சூத்திரங்களை
உனக்குச் சொல்லித் தரும்.
வேதங்கள் என்றுமே மரிப்பதில்லை
அதைப்போல்தான்
உன் வலிகளில் மலரும்
வெற்றி இலட்சியங்களும்..
வலிகளில் மலரும் சீரிய வெற்றிகள்
நிச்சயம் வேதமாகும்.
துவண்டுவிடாமல் துணிந்து நில்
வலிகளின் வெள்ளோட்டமே
வெற்றி முத்திரை பதிக்கலாம்...
எண் திசைதோறும்
உன் பெயர் ஒலிக்கலாம்...!
சிலுவைப்பாரம் சுமந்த இயேசுவும்
வேதனைகளைச் சுமந்த நபியும்
சோதனைகளைச் சுமந்த காந்தியும்
போற்றப்படவில்லையா…?
அவர்களின் வலிகள்தான்
நம் வழிகளாக வியாபித்திருக்கிறது.
வலிகளின் சங்கமத்திலும்
வெற்றிகளே முடிவுரையாய்
முறுவல் பூக்கும்..
நம்பிக்கை வை..
காரிருள் அமாவாசைக்குப்
பிறகுதானே
பிரகாச வளர்பிறை நாட்கள்..!
இருண்டவலிகளுக்குப்
பிறகுதான்
பிரகாச வெற்றிப் பாதை
தோல்விச் சுமைகளுக்குள்
சூனியமாய் துவண்டிருந்த
இருண்ட காலங்களை
ஒதுக்கி விட்டு
வெற்றியின் வெளிச்சவாசலுக்கு
அடியெடுத்துவை..
தோல்விச்சுமைகளின்
தோள்களில் துவண்டு விடாதே...
வலிகளின் விளிம்புகளிகளிலும்
எதிர்ப்படும் ஒளிமய எதிர்காலம்
நிரந்தரமாய் உன்னை ஆலாபிக்கும்
இளைஞனே...
தோல்விகளில் அமிழ்ந்தது போதும்
வலிகளில் முகம் கழுவு.
வரும் வெற்றிப் புத்துணர்ச்சி
உனது சரித்திரத்தை எழுதவைக்கும்..