புதுக்கவிதை எழுதப்போறேன்

மோனத்தில் உன்னை எழுதிட வேண்டுமென்ற
ஞானம் பிறந்தென்னை ஆட்டிவைக்க கான
குயிலேன்றே கூவுகின்றேன் நான்

சிந்தடி என்றும் அளவடி என்றுமின்றி
வந்தே எனதிலான சிந்தனையில் குந்தடி
என்றே அழைக்கின்றேன் வா

கட்டுக்குள் சிக்கி கைதியென வாழ்வதுபோல்
கற்பனை ஊற்றெடுக்கும் காலத்தில் ஒட்டாமல்
நிற்கும் தடைதன்னை நீக்கு.

எழுத்து அசைசீர் தளைஎதுகை மோனை
இயைபு தொடைஎன்று அராய்ந்து பார்த்து
எழுதுதற்குள் போகும் உயிர்

பரந்த இதயத்துச் சிந்தனைக்கு நீதான்
திறந்த கதவுகளால் வானில் பறந்த
பறவைகளாய் இன்றின் படைப்பு.

அளவாக தைத்தெடுத்து ஆடை அணிய
முடியா அவசர காலம் கிடைத்ததை
போட்டு அழகுபார்க்கும் நாகரீகம் போலநீ
எனக்குள்ளே வந்து விடு

நாடோடும் வேளை நடுவிலே நானுமோடி
பாடி விடுகிறேன் பாட்டு புதுக்கவிதை
உன்தோளில் கைபோட்டுக் கொண்டு.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (28-Apr-16, 2:56 am)
பார்வை : 127

மேலே