உழைப்பே உயர்வு

உழைப்பே உயர்வு
பாவலர் கருமலைத்தமிழாழன்

நமக்குள்ளே பெரும்சக்தி அடங்கி யுள்ள
---நற்செய்தி அறிந்தீரோ ! மூடி யுள்ள
உமிதன்னை நீக்குவதா லன்றோ நம்மால்
---உள்ளிருக்கும் அரிசிதனைப் பார்க்க ஏலும்
நமக்குள்ளே பெரும்எழுச்சி முடங்கி யுள்ள
---தன்மையினை அறியாமல் உறங்கு கின்றோம்
நமதுள்ள உணர்வுகளில் முயற்சி என்னும்
---நற்சாவி கொடுத்தால்தான் உண்மை தோன்றும் !

சோம்பலிலே சுகம்காணும் எண்ணம் கொண்டே
---சோம்பிநிதம் வாழ்வினிலே சூம்பு கின்றோம்
சாம்பலிலே பாத்திரத்தைத் தேய்த்தால் தானே
---பளபளப்பும் தூய்மையுமே கிட்டும் ! காலை
ஆம்பலென மனமிருந்தால் புதிய சிந்தை
---ஆர்தெழுவே வழியுண்டோ ! கசப்பைக் கூட்டும்
வேம்பன்றோ நோய்தீர்க்கும் ! உழைப்பே நம்மின்
---வேதனைகள் தீர்க்கின்ற நல்ம ருந்து !

தோளிரண்டும் வலிமைதாங்கும் வன்மை பெற்று
---வளர்ந்துளதை நாமெண்ணிப் பார்ப்ப தில்லை
தாளிரண்டும் புதியபாதை துணிந்து செல்லத்
---துடிப்பதனை நாம்நினைத்துப் பார்ப்ப தில்லை
வாயினிக்கப் பேசிநிதம் பொழுது போக்கும்
---வாய்ப்பினிலே நாம்வாழ்வை ஓட்டு கின்றோம்
மாயிருளைப் போக்கிஒளி பாய்ச்சு கின்ற
---வகைதெரிந்த கரங்களுக்குப் பணிகொ டுப்போம் !
-1-
ஏய்த்துதினம் வாழ்ந்திடலாம் எனநி னைக்கும்
---எத்தர்கள் இந்நாட்டு வளர்ச்சி தன்னை
மாய்க்கின்ற பெருநோயர் ! பிறரு ழைப்பில்
---மலர்பறிக்கும் குறுமதியர்! முன்னேற் றத்தைத்
தேய்க்கின்ற தடைக்கற்கள்! நெஞ்சிற் குள்ளே
---தெளிவில்லா திட்டங்கள் தீட்டி நாளும்
தோய்வோரால் நாட்டிற்கு நன்மை என்ன
---சோதனைகள் ஏற்பதற்கே துணிவு வேண்டும் !

மந்திரத்தால் மாங்காயைப் பறிப்ப தற்கு
---மனக்கணக்குப் போடுவோரே உள்ளத் துள்ளே
தந்திரத்தால் பலன்களினைப் பெறுவ தற்குத்
---திட்டங்கள் தீட்டுவோரே மழையைப் போல
சிந்திடுமோ வானிருந்து விளைச்ச லெல்லாம்
---சிந்தித்து நாம்பார்க்க வேண்டும் ! நாளும்
சிந்துகின்ற வியர்வையிலே உழைத்தால் தானே
---சிறப்பான நல்வாழ்வு நமக்குக் கிட்டும் !

சாதிகளும் சாத்திரமும் சமய மென்னும்
---சடங்குகளும் நமக்குள்ளே வேண்டாம் ! நம்மை
பாதிக்கும் ஏற்றத்தாழ்வு பிரிவும் வேண்டும்
---பாசமுள்ள சோதரராய் நாமி ணைந்து
சாதிக்கும் செயலொன்றே நம்மை ஏற்றும்
---சலியாத உழைப்பாலே இந்த நாட்டை
மேதினியில் உயர்த்திடவும் வாழ்வில் இன்ப
---மேன்மையினைப் பெற்றிடவும் ஒன்றாய்ச் சேர்வோம் !

-2-

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (28-Apr-16, 4:15 am)
பார்வை : 497

மேலே