உழவர்

உழவர்
பாவலர் கருமலைத்தமிழாழன்

நிலமொன்றே வாழ்க்கையென்று நிதமு ழைத்தே
---நிலைத்தகாப்பாய் காய்காய்த்த உள்ளங் கைகள்
வலம்வந்து வலம்வந்து பயிர்வ ளர்ந்த
---வளம்கண்டு மகிழ்ந்திட்ட பசித்த கண்கள்
களம்சுற்றித் தானியங்கள் அடித்துச் சேர்த்துக்
---கலம்நிறைத்துத் தந்திட்ட வெறுமை வயிறு
நலமனைத்தும் பிறர்க்களித்துக் கோவ ணத்தில்
---நடமாடும் வெள்ளைமனக் கறுத்த மேனி !

நாய்பிடித்து நடைபயிற்சி செல்லு கின்ற
---நகரத்து மக்களினை வாழ வைக்கத்
தாய்அணைக்கும் குழந்தையெனக் கலப்பை தோளில்
---தாங்கிச்செங் கதிர்முன்னே நடந்து சேல்வோன்
வாய்சுவைக்க நட்சத்திர விடுதி தன்னில்
---வகைவகையாய் உணவுகளை உண்ப தற்குக்
காய்ந்தஊறு காய்தொட்டுச் சோற்று நீரை
---காண்அமுதாய் தான்பருகி அளிக்கும் தோழன் !

இயற்கைஉரம் தந்தமரக் காட்டை வெட்டி
---இருந்தஉயர் மலைதகர்த்து மழைவி ரட்டி
வயல்வெளியை ஏரிகளை மனைக ளாக்கி
---வாழ்ந்தவரை வெளியேற்றி விற்ற பின்னே
உயர்உழவன் பின்னிந்த உலகம் என்றே
---உன்னதமாய்ப் போற்றிட்ட உழவன் இன்றோ
அயலூரில் கூலிகளாய் உழைக்கச் சென்றே
---அடிப்பட்டும் உதைப்பட்டும் சாகும் அவலன் !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (28-Apr-16, 4:21 am)
பார்வை : 156

மேலே