உழைப்பாளி

உழைப்பாளி
பாவலர் கருமலைத்தமிழாழன்

நெல்குவித்து வறுமையினை ஓட்டு கின்ற
---நிறையுழைப்பு உழவரினைப் போற்று வோமே
கல்மண்ணைச் சுமந்துபெருங் கட்ட டங்கள்
---கட்டும்தொழி லாளரினைப் போற்று வோமே
நல்வளத்தைத் தொழிற்சாலை தனிலு ழைத்து
---நல்குகின்ற தோழரினைப் போற்று வோமே
வெல்கின்ற அறிவியலில் நாடு யர்த்த
---வினையாற்றும் அறிஞரினைப் போற்று வோமே !

தலைக்கூடைச் சுமையோடும் இடுப்பில் பெற்ற
---தன்குழந்தை சுமையோடும் கீரை விற்போள்
தலையினிலும் முதுகினிலும் மூட்டை தூக்கித்
---தள்ளுவண்டி பாரத்தை இழுக்கும் கூலி
வலையோடே உயிர்க்குறுதி இல்லா போதும்
---வாரிதியில் போராடும் மீன வர்கள்
விலைமதிப்புத் தன்னுழைப்புத் தோழர் தம்மை
---விரலிணைத்துக் கைகுவித்து வணங்கு வோமே !

உடலுழைப்பில் உழைத்தாலும் மதியு ழைப்பில்
---உழைத்தாலும் உழைக்கின்ற வர்கத் தாரின்
உடலுழைப்பை மதியுழைப்பைச் சுரண்டு கின்ற
---உன்மத்தர் தமைவீழ்த்தி உழைக்கும் தோழர்
முடமாகிப் போகாமல் வாழ்வில் நல்ல
---முன்னேற்றம் காண்பதற்குத் துணையாய் நின்று
நடமாடும் இறையிவர்தாம் என்றே நாளும்
---நாம்போற்றி மதித்தன்பால் வாழ்த்து வோமே !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (28-Apr-16, 4:32 am)
பார்வை : 390

மேலே