புதியதோர் உலகு செய்வோம்

புதியதோர் உலகம் செய்வோம்
பாவலர் கருமலைத்தமிழாழன்

பூத்திருக்கும் பூஞ்செடிகள் ! பச்சைப் பட்டைப்
---போர்த்திருக்கும் மலைச்சாரல் ! வானை முட்டக்
காத்திருக்கும் பசும்மரங்கள் ! அடர்ந்த காடு
---கவின்கொஞ்சும் தோப்புகளும் சோலை சேர்ந்து
கூத்திசைக்கும் இயற்கைவளம் பூமி யெங்கும்
---கும்மாளம் போட்டபடி நடன மாடப்
பூத்தகாற்று சுற்றுசூழல் மாசே இல்லா
---புதியதொரு உலகத்தைச் செய்வோம் வாரீர் !

சாதிகளின் பிரிவுயின்றி உயர்வு தாழ்வு
---சண்டையின்றி சாத்திரத்தின் பேத மின்றி
ஆதிக்க மதங்களின்றி வணங்கு கின்ற
---ஆண்டவனில் முரண்பட்ட கருத்து மின்றி
வாதித்து வருத்தத்தை வளர்ப்போ ரின்றி
---வளரன்பில் அனைவருமே ஒன்றி ணைந்தே
ஆதியிலே வாழ்ந்ததுபோல் வாழ்வ தற்கே
---அமைத்திடுவோம் புதியதொரு உலகை வாரீர் !

பலமொழிகள் பேசினாலும் அறிவு என்னும்
---பாலத்தால் ஒருங்கிணைத்துக் கணினி மூலம்
பலரிடத்தும் பலமொழியில் பேச தற்குப்
---படிசமைத்து மொழிச்சண்டை ஏது மின்றி
இலக்கியங்கள் மொழிமாற்றம் செய்து தம்தம்
---இலக்கியமாய்ப் போற்றுகின்ற பொதுமை நெஞ்சில்
கலந்தெந்தக் காழ்ப்புமின்றி வாழ்வ தற்குக்
---கண்டிடுவோம் புதியதொரு உலகை வாரீர் ! (1)



நாடுகளுக் கிடையெந்தத் தடையு மின்றி
---நாடுசெல்ல அனுமதியும் தேவை யின்றி
வாடுகின்றார் ஒருநாட்டு மக்க ளென்றால்
---வளநாடு கரங்கொடுத்துக் காத்து நின்று
பாடுபட்ட பலனெல்லாம் அனைவ ருக்கும்
---பகிர்ந்தளிக்கும் பொதுவுடைமை எண்ணம் பூத்த
ஏடுகளில் மட்டுமிங்கே எழுதி வந்த
---ஏற்றமுடை புதுவுலகைச் செய்வோம் வாரீர் !

வான்மீது வகுத்திட்ட எல்லை யின்றி
---வாரிதியில் பிரித்திட்ட எல்லை யின்றி
ஏன்நுழைந்தாய் எம்நாட்டின் எல்லைக் குள்ளே
---என்றெந்த நாட்டினிலும் கேட்போ ரின்றித்
தேன்சிந்தும் மலர்மணத்தைச் சொந்த மென்று
---சொல்கின்ற முட்டாளாய் யாரு மின்றித்
தான்என்ற எண்ணமின்றி உறவாய் அனைவர்
---தாங்ககின்ற புதுவுலகைச் செய்வோம் வாரீர் !

உயிர்பறிக்கும் குண்டுகளைச் செய்வோ ரின்றி
---உயிர்மாய்த்து நிலம்பறிக்கும் போர்க ளின்றி
உயர்சக்தி அணுக்குண்டு அழிவிற் கின்றி
---உயர்த்துகின்ற ஆக்கத்தின் வழிச மைத்தே
உயரறிவால் கண்டிடித விஞ்ஞா னத்தை
---உயர்வாழ்வின் மேன்மைக்குப் பயனாய்ச் செய்து
பயமின்றி அமைதியாக வாழ்வ தற்கே
---படைத்திடுவோம் புதுவுலகை வாரீர் வாரீர் ! (2)

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (28-Apr-16, 4:37 am)
பார்வை : 284

மேலே