நப்பாசை தானெனக்கு

தப்பாமல் வருபவனே தண்டனையும் தருபவனே
நப்பாசை தானெனக்கு நமனுன்னைக் காண்பதற்கு
எப்படிநீ வருவாயோ என்பதனைச் சொல்வாயா ?
அப்போதே உடன்வருவேன் அடம்பிடிக்க மாட்டேனே !

தத்தளிக்கும் வாழ்வினிலே தவிக்கவைத்துப் பறிப்பாயா
மெத்தனமாய்ப் பிணியினிலே வேகவிட்டுப் பிரிப்பாயா
நித்திரையில் சத்தமின்றி நிமிடத்தில் எடுப்பாயா
பொத்திவைத்து மெதுவாகப் போராடிக் கொல்வாயா ?

கொலுபொம்மை யில்லைநான் கூற்றுவன்நீ விளையாட
வலுவிழந்துப் போகவில்லை வைரந்தான் என்மனமும் !
உலுக்காமல் வலிக்காமல் உடலினின்றும் உயிரையெடு
அலுங்காமல் குலுங்காமல் அழகாக எடுத்துவிடு !

வற்றாத நதிபோலும் வரமெனக்குக் கிட்டாதா
பற்றில்லா வாழ்வினிலே பரமனருள் சேராதா
உற்றாரும் சம்மதிக்க உடல்தானம் செய்வேனே
குற்றமிலா குணத்தோடு கூற்றுவனே வந்திடுவேன் !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (30-Apr-16, 7:07 pm)
பார்வை : 110

மேலே