உழைப்பவன் தானே அட்சய பாத்திரம்-முஹம்மத் ஸர்பான்
சாக்கடை நாற்றத்தால் மூக்கை பொத்திக்
கொள்ளும் ஆறறிவு மனிதனே! கொஞ்சம் சிந்தி
தூயகாற்றை சுவாசிக்கிறாய்;உன் கழிவுகள்
அள்ளும் கைகளுக்கு கால் விளங்கிடுகிறாய்.
அழுக்குகள் படிந்த உந்தன் உள்ளாடைகள்
சலவை செய்யும் தொழிலாய் -கொண்டாட்ட
நாட்களில் புத்தாடை அணியாவிட்டாலும் அழுக்கடைந்த
உடைகளை சலவை செய்த வரலாறு மண்ணில் இல்லை.
தூசுக்கள் படிந்த மனிதனின் முடிகளை தன்
கரங்களால் அலங்கரிக்கும் ஏழைத் தொழிலாளி
உண்ணும் போது அந்த விரல்களை அறுத்தெறிந்து
விட்டு வேறுவிரல்கள் பொறுத்தியதுமில்லை...,
தங்கச் சுரங்கத்தில் மின்னும் பொனெடுக்கும் கைகள்
வறுமை என்னும் ராஜா வாழ்க்கை தான் வாழ்கிறது.
மூட்டை சுமக்கும் தோள்களில் காணப்படும் காயங்களும்
புண்ணங்களும் தன் முதலாளி வீட்டின் செல்வங்கள்..
நிலமெனும் தாயிடம் வித்துக்கள் தூவி காத்திருந்து
உலகின் பசியாற்றும் உழவனுக்கு இயற்கை மரணம்
கொடுக்க இறைவனும் யோசிக்கிறான்.
உயிரை மரணத்திடம் அடகு வைத்து பிச்சை எடுப்பது
கேவலமென்று செய்யும் தொழிலை தெய்வமாய்
மதிப்பவன் உழைப்பாளி...,
கோடை எது? குளிர் எது? நிழல் எது?எதுவும் தெரியாது
காயத்தால் சிந்தும் உதிரத்தையும் தோளின் வியர்வையாய்
எண்ணிப் பார்க்கும் வண்ணம் கொண்ட நெஞ்சத்திற்கு
ஈரமற்ற முதலாளி வர்க்கம் அளிக்கும் ஊழியம்
"உழைப்பவன் தானே அட்சய பாத்திரம்"