உன் வெற்றிக்கு பதியம்

நீ விழுந்தாலும்
சிரிப்பார்கள்
நீ எழுந்தாலும்
விழுந்ததை சொல்லியே
சிரிப்பார்கள்!

அர்த்தம் புரியாதவர்கள்
அசிங்கம் என்பார்கள்
உன்னை தெரியாதவர்கள்
கிறுக்கன் என்பார்கள்!

இவர்களின் இழிமொழிக்கெல்லாம்
ஒருபோதும் செவி மடுக்காதே!

ஓடிக்கொண்டே இரு!

நீ ஓட வேண்டியது
நூறுமீட்டர் என்றால்
வேகம் மட்டும் போதும்!

உன் மாரத்தான் ஓட்டத்திற்கு
கொஞ்சம் விவேகமும்
அவசியம் நண்பா!

எல்லாரிடமும்
எல்லாவற்றையும்
சொல்லாதே!

ஏதோ ஒரு பெருஞ்சுவரையும்
ஏதோ ஒரு கும்மிருட்டையும்
நண்பர்களாக்கி கொள்!

எதற்கும் சமரசம்
செய்து கொள்ளாதே
எப்போதும் ஆறுதல் தேடாதே!

ஆறுதல் முகமூடியில்
உன் தோல்விக்கு
ஆருடம் சொல்பவர்களே
இங்கு அதிகம்

அவர்களை அருகில்
வரவிடாமலிருப்பதே
உன் வெற்றிக்குப் பதியம்!!

எழுதியவர் : குமார் பாலகிருஷ்ணன் (30-Apr-16, 10:01 pm)
பார்வை : 76

மேலே