உழைப்பாளி உதிரம் மண்ணில் காயவில்லை --முஹம்மத் ஸர்பான்
மழை பெய்கிறது;குடையின்றி ஓடுகிறான்;
அறுவடை நாள் வரை உழவனின்
ஓட்டைக் குடிசைக்குள் வறுமையின் தீபாவளி.
நிமிடங்கள் பிந்தியது;செருப்பின்றி விரைகின்றான்;
சாக்கடை உலகத்தில் களியுடலுக்கு தரிசனம்...,
நொடிகள் பிந்தியதை மணித்துளிகளாக எழுத்தாக்கி
ஏழையின் வயிற்றில் அடிக்கும் கொள்ளையர்கள்
அணியும் வெள்ளாடையிலும் அவன் கரைகளே!
என் கண்ணுக்கு தெரிகிறது.
மூளையை உருக்கும் கோடை வெய்லில் கூவிக்கூவி
பசிக்கு நேர்மையின் பாதையில் உழைக்கும் உழைப்பாளி
ஒரு மாதத்தில் மூன்று வேளை உண்பதும் சந்தேகம் தான்.
கடலோடு போராடி மீனவன் சிந்திய வியர்வையை
கரையில் மீனாய் களவு கொள்கிறான் படகின் சொந்தக்காரன்
கடலின் அலைகளும் உப்பின் வடிவில் கறுப்புக் கொடி
ஏந்துகிறது.
உழைப்பாளி அள்ளி வரும் செல்வத்தில் கிள்ளிக் கொடு;
அது போதும் அவன் வயிற்றில் பசிகள் ஏப்பம் கொள்ள..,
தருவதாய் சொல்லி முழுவதுமாய் கொள்ளை கொள்ளாதே!
இன்னும் சிந்திய உழைப்பாளி உதிரம் மண்ணில் காயவில்லை.