பறவையுடன் ஒரு பயணம்--துளிப்பாக்கள் - குமரேசன் கிருஷ்ணன்

குச்சிகளைச் சேகரிக்க
தயங்காத பறவையே
கூடுகட்டத் துணியும்...

-----------------------------------------

சூரியனை மறைக்கும்
பறவையின் நிழல்தான்
பூமியை முத்தமிடுகிறது...

--------------------------------------------

மைனாக்களின் குரலில்
ரீங்காரமிடுகிறது
அவள் காதோரமொழிதல்..

---------------------------------------------

திறந்துவிடப்பட்ட கூண்டுப் பறவைப்போல்
திக்கெங்கும் சிறகுவிரிக்க ஆசை
சிறைபட்ட மனதிற்கு..

------------------------------------------------

சோகத்தில் குரலெழுப்பும்
அக்கா குருவியால்தான்
துக்கத்தை விரட்ட முடிகிறது...

-------------------------------------------------

அன்று பெய்த மழை நீர்க்குட்டையில்
குளித்துச் சிலிர்க்கிறோம்
நானும்..சிட்டுக்குருவியும்..

-------------------------------------------------

எந்த பறவையும்
விரும்புவதில்லை
விடிந்த பின்பும் உறங்குவதற்கு...

----------------------------------------------

பசியிருந்தும் உணவிருந்தும்
தனியே உண்ண முடிவதில்லை
காகத்தால்..

------------------------------------------------

ஆழ்ந்த உறக்கத்திலும்
ஏதோவொரு பறவையின் கானமே
எழுப்பிவிடுகிறது மனதை..

---------------------------------------------

அழகாயிருப்பினும்
அச்சத்தையே எழுப்புகிறது
மின்கம்பியில் அமர்ந்த பறவை...

-----------------------------------------------

எந்த தயக்கமுமின்றி மொட்டுக்கள்
அதிகாலையிலே மலர்ந்துவிடுகின்றன
சிட்டுக்களின் வரவிற்காய்...

------------------------------------------------

மொட்டைமாடி உறக்கத்தில்
பறவைகளின் கானமே
துயிலவும் எழுப்பவும் செய்கிறது...

-----------------------------------------------------------------
--- குமரேசன் கிருஷ்ணன் ---

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (5-May-16, 6:52 pm)
பார்வை : 217

மேலே