அன்னை

அன்னை
பாவலர் கருமலைத்தமிழாழன்

அன்னைக்கு மாற்றுண்டோ அம்மா என்னும்
-----அமுதச்சொல் சுவைதனுக்கே ஈடு முண்டோ
தன்வயிற்றுள் பத்துமாதம் சுமந்து பெற்று
-----தன்குருதி பாலாக்கி ஊட்டி விட்டு
பொன்னான குழந்தைகுடல் ஏற்கும் வண்ணம்
-----பொழுதெல்லாம் பத்தியத்தில் உணவு உண்டு
தன்வயிறு காய்ந்தபோதும் பிள்ளை கட்குத்
-----தந்துணவு மகிழ்பவளே அன்பு அன்னை !

தவழ்ந்துவரும் குழந்தையதன் அழகு பார்த்து
-----தத்திதத்தி நடைபயிலும் எழிலைப் பார்த்து
குவளைமலர் கண்விரிய முத்த மிட்டு
-----கூடியுள்ளோர் கண்ணேறு கழித்துப் போட்டு
தவறிசிறு எறும்புகடித் கழுத போது
-----தன்னுடலும் மனம்பதற வாரி யணைத்து
தவமியற்றும் கவனமுடன் நாளும் வளர்த்துத்
-----தலைநிமிர்த்தி மகிழ்பவளே அன்பு அன்னை !

மருமகளின் அணைப்பிற்குள் மகனும் வீழ்ந்து
-----மனம்நோக மொழிகளினை உதிர்த்த போதும்
அரும்பெயரன் பெயர்த்தியொடு அகம்ம கிழ்ந்தே
-----அழகான குடும்பமெனக் கட்டிக் காத்துப்
பெருமையினை நிலைநிறுத்த ஏள னத்தை
-----பெருமூச்சு தனில்விழுங்கி நகைமு கத்தில்
திருவாக இல்லத்தின் தீப மாக
-----திகழ்ந்துவழி காட்டுபவள் அன்பு அன்னை !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (8-May-16, 9:23 am)
பார்வை : 185

மேலே