அம்மா

உன் உடல் உலகிறங்க மட்டுமல்ல
குடல் நிறையவும் குருதி சிந்தியவள்...

ஆதவன் வரும் முன்னே அடுப்பூதி
அனலில் வெந்தவள்...

பிடித்த உணவை உனக்கூட்டி
பிடி சாதம் நீருண்டு படுக்கை செல்பவள்...

உன் கூந்தல் சீவி சிங்காரித்துவிட்டு
கூலிக்கு அழுக்கு கொண்டை முடிந்தோடியவள்...

உன் பொன்விரல் புத்தகம் பிடிக்க
தன் கையில் கொத்தோ கோடரியோ பிடித்தவள்...

உன் பஞ்சு பாதம் நோகாதிருக்க
தன் பாதம் பருத்திபோல் வெடித்தவள்...

உன் மேனி பொன்னாய் சிலிர்க்க
தன் மேனி புண்ணாக வியர்த்தவள்...

புத்தாடை நீ அணிய
கந்தலுடன் காலம் கழித்தவள்...

எட்டி உதைத்தாலும் உன் பாதங்களுக்கு
முதல் முத்தம் கொடுத்தவள்...

எடுத்தெறிந்து பேசினாலும் கண்ணே! மணியே!
எனக்கொஞ்சி மகிழ்ந்தவள்...

எமனே வந்தாலும் உனக்காக
எதிர்க்க துணிபவள்...

என்னதான் ஈடாக கொடுத்தாலும்
எதற்கும் நிகரில்லாதவள்...

ஆண்டவனே வந்தாலும்
அனுமதி கேட்டு பார்க்கும் தகுதி உடையவள்....

அம்மா.....

எழுதியவர் : கணேசன் நா (8-May-16, 7:38 pm)
Tanglish : amma
பார்வை : 304

மேலே