அன்பென்றாலே_அம்மா - கற்குவேல் பா

நயினார் குப்பம் கருவாடு
புள்ளைக்கு சேராதுன்னு - மூன்று
பேருந்துகள் பிடித்து ,
40 கிலோமீட்டர் கடந்து - காசிமேட்டுக்
கருவாடு வாங்கி வைப்பா !

மச்சமொன்னு புதுசா,
புள்ள தேகத்துல தென்பட்டாலும்,
என்னமோ ஏதோன்னு - ஒரு
நூறுமுறை,
ஆராய்ந்து பார்த்திடுவா !

வேலை செய்தே,
ரேகையெல்லாம் தேய்ந்தாலும்,
புள்ள எதிர்காலம் எப்படின்னு
மாதம் ஒருக்கனாலும் - மறவாம
கைரேக பார்த்திடுவா !

கோடி தெய்வம் அங்கே,
அவ காலடியில் விழுந்து கிடக்க ;
புள்ளைக்கு ஒன்னுன்னா,
ஒரு தெய்வம் விடாம - சண்டையிட்டு
கருங்கல்லையும் கரச்சிடுவா !

புருஷன்
அடிச்சுக் கேட்கும்போதெல்லா,
சங்கிலிய கொடுக்க மறுத்தவ -புள்ள
படிக்க கேட்க,
பதறாம கொடுத்திடுவா !

மனைவி சொல் கேட்டு,
முதியோரில்லத்துல சேர்த்தாலும்;
அவ நெனப்பெல்லாம்,
புள்ள சாப்டுச்சோ இல்லையோனுதா,
மணிக்குமணி இருந்திருக்கும் !

#அன்பென்றாலே_அம்மா

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (8-May-16, 4:42 pm)
பார்வை : 126

மேலே