உழவர்

உதிக்காதச் சூரியனை எழுப்பி விட்டு
=உழவுக்கு செல்கின்ற உழவர் தாமும்
அதிகாலை புலர்தற்குள் அடியை வைத்து
=அனுங்காமல் வயல்நோக்கி நடையைப் போட்டு
எதிர்பார்த்துக் காத்திருக்கும் நாற்றுக் காக
=எடுத்தமண் வெட்டியினால் வாய்க்கால் வெட்டி
கதிர்விளைய நீரிறைத்து வரப்பு நிறைத்து
=கழனிசெய்வ ராயினுமே கஷ்டம் கொள்வர்

வெந்தணலில் புழுவாக வாடி நின்று
=வெட்டுகின்ற மண்வெட்டி வீச்சால் மண்ணை
சந்ததமும் பதப்படுத்தி சகதி யாக்கி
=சத்துணவாய் உரமிட்டு சக்தி கூட்டி
சிந்துகின்ற வியர்வைத்துளி சேர்ந்த உப்பும்
=செழிப்பாக கதிர்விளைய சேர்த்து மக்க
உந்துதலாய் இருக்கின்ற உழைப்பைக் காட்டும்
=உழவரின்றி உய்யாது உலக மென்றும்

உழைப்பென்னும் பெருஞ்சொத்தை உணர்வில் வைத்து
=உயிராக மதிக்கின்ற உள்ளம் பெற்று
பிழைப்புக்காய் மட்டுமன்றி பின்வரும் மண்ணின்
=பரம்பரைக்கும் உதவுதற்காய் பாடு பட்டு
இழைக்கின்ற கயவர்களின் இழிவைத் தாங்கி
=இமைக்குள்ளே கண்ணாக என்றும் உழவை
தழைத்தோங்கச் செய்கின்ற தர்மம் காத்து
=தலைநிமிர்ந்து வாழ்பவரே தாரணி உழவர்.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (9-May-16, 2:47 am)
Tanglish : uzhavar
பார்வை : 110

மேலே