சொற்கள்
எப்போதும் பகிரப்படாது
எண்ணங்கள் உள்ளே
ஒளிந்திருக்கின்றன
எழுத்தற்ற சொற்கள்
உள் மன வெளிகளினதும்
உயிரின் ஆழங்களினதும்
உருவமுள்ள உணர்வுகளின்
ஒளி புகாத சொற்கள்
மழையாய் பொழிந்து
நதியாய் நகரும்
நினைவு ரதங்களில்
நீண்ட உலாச் செல்லும்
நிஜங்களின் சொற்கள்
கட்டமைக்கப்பட்ட மொழிகளால்
கண்காணிக்கப்படாத
கவிதைக்குள் அடங்காத
காலம் பேசும்
வார்த்தைக்குள் வசப்படாத
சொற்கள்
நெடு மலையின் முகட்டின்
நீண்ட சமுத்திரத்தின் ஆழத்தின்
அழியாத காலப்புழுதியின்
அறியப்படாத உண்மைகள்
சுமந்த சொற்கள்
கோர்க்கப்படும் கவிகளில்
சேர்க்கப்படும் வரிகளின்
பள்ளங்களில் தேங்கும்
வார்த்தைகளின் வெள்ளங்களில்
வெளிப்படாத சொற்கள்
ஒற்றைத்துளியென நிறைந்து
உணர்வினில் உறைந்து
உயிரினில் கரைந்து
உடலோடு உடன் கட்டையேறும்
ஒருவரும் அறியாச் சொற்கள்.