வாழ்ந்துவிட்டு வாழ்க்கைகொடு
முகிலும் முகிலும் முட்டி கொள்ளும் ஓர் ரகசிய இரவு
சப்தமிலா நிசப்தம் பாடும் ரீங்கார ஒளியில்
கீற்றாய் பாய்ந்து விரட்டியது மின்னலும் ,மத்தளமாய் மழையும்
இது காற்றா புயலா கண்டு சொல்ல யாரும்மில்லை
கானலா கனமழையா கணக்கிட தெரியவில்லை
பளிச் பளிச்சென்று ஊடுருவும் மின்னலின் இடைவெளியில்
இடையில்ருந்து இறங்கிவிட துடிக்கிறது புத்தம் புது உயிர்
பாதம் பிசைந்து உந்தி முந்தி முட்டி பிரண்டு
பிறழ்ந்து பிறந்துவிட்டது குழந்தை .....
நெகிழ்ந்தது தாய்மை
நெருக்கத்தை தளர்த்து முகம் பார்த்தார் தந்தை
துசி நுழையா கை சுருட்டி,பட்ட சூடு பழக்கமில்லையே
பிறந்தோமா இறந்தோமா தெரியவில்லையே
கத்தி கத்தறது குழந்தை
சற்று நேரத்தில் மெல்லிய விரல் வகிடு கோதி முத்தமிட்டது
அடடே அதே மென்மை , என் அம்மா தான்
இதழ் விரித்த மொட்டாய் இமை தளர்க்கிறது மெதுவாய்
சிமிட்டி சிமிட்டி பூவாய் விரிந்தது விழி
எங்கும் இருள்மயம் கார் இருட்டாய் புது கருவறை புகுந்தோம்மென
இதழ் சிரிக்கிறது மழலை
ஆசை முகம் பார்க்க ஆலாவி வந்த தந்தைக்கு பேர் அதிர்ச்சி
பவளமாய் பிறந்திட்ட என் கண்மணிக்கு கண்களில்
ஏன் இந்த காப்புரை ....?
பிறவி குருடாம் சொல்லிச்சென்றனர் செவிலியர்கள்
இடி விழுந்த இதயமாய் நொறுங்கி நடந்தார் கொட்டும் துளியில்
வீழ்வது மழையா இவரது கண்ணீரா கரை தெரியவில்லை எவர்க்கும்
விதியின் சதியை வெல்ல ஏவருமில்லை என புலம்பி அழுகிறார் நிற்கதியில்
நெடுவழி சாலையில் நகர்ந்த வேளையில்
குருதி பறந்து கிடக்கின்றனர் தந்தையும் மகனுமாய்
கைகூப்பி கண்ணசைவில் தன் கண்மணியை காப்பாற்ற கெஞ்சுகிறது அவ்வுயிர்
இரு தோழ்களிலும் ஒருவரென சாய்த்து எடுத்து சென்றான்
வீழ்ந்தவரை படுகையில் கிடத்தி சிறுவனை மார்பினில் கிடத்தி
ஆளுக்கொரு அவசரமாய் உயிர் நிலை அறிகின்றனர்
தன் மகன் உயிர் பிரியா ரகசியம் கேட்டு
கோரவிழி நோக்கி கண் அயர்கிறார் தந்தை ..
போனவர் போகட்டுமென இறுக்க இதயம் கொண்டு
கண் உறங்காமல் சிறுவனை தேற்றி விடியற்காலையில்
தன் மகனை காண திளைத்து நிற்கிறார்
வேகமாய் சிறுவன் விழிக்க விரல் பிடித்து கரம் சேர்த்து கேட்கின்றான்
என் அப்பா எங்கே ?..........
விழியோரம் கண்ணீர் சூழ வா என்று அள்ளி அணைத்து
கண்ணில்லா தன் குழந்தையை காண கூட்டி செல்கிறார்
விடியல் விழிக்கும் செந்நிற மேகம் மிதக்கும்
நேர்திசையில் நிற்க நகர்ந்து சென்று உற்று உற்று நோக்குகிறார்
படபடத்த குழந்தை சட்டென்று விழி திறக்க
திறந்த விழியின் கருவிழி ஓரத்தில் அம்சமாய் ஒரு மச்சம்
கண்ட மாத்திரத்தில் சிறுவன் கத்தி அலைகின்றான்
" அப்பா என "
உயிர்க்கு உரிமைகொடு உச்சரிக்கும்
ஓர் ஓர் உறுப்பும் உன் உணர்வுகளையும் உறவுகளையும் ............
" வாழ்ந்துவிட்டு வாழ்கைகொடு உயிரே உயிராய் "