நான் உங்கள் வேட்பாளன் பேசுகிறேன்

நான் உங்கள் வேட்பாளன் பேசுகிறேன்..!
=====================================

உயிரினும் மேலான வாக்காள பெருமக்களே
உங்களின் அன்பான வேட்பாளன் பேசுகிறேன்
அனைவருக்குமாய் வணக்கம்
ஆதரவு தாருங்கள் எனக்கும்..!

எக்கட்சியும் செய்திடாத
வியக்க வைக்கும் வசதிகள்
நாட்டு மக்களுக்காய் செய்வேன்
உங்களுக்காய் உயிரும் தருவேன்..!!

சொந்தமாய் நிலம் இல்லாதவருக்கு
நிலவினில் ஒரு ஏக்கர்
நிச்சயமாய் அளித்திடுவேன்
செவ்வாயில் வேண்டுவோர்க்கு
அங்கேயும் நிலமுண்டு
செவ்வாய் தோஷம் உள்ளவர்க்கோ
சூரியனில் இலவசமாய் இட ஒதுக்கு..!

வெளிநாட்டு ஏக்கம் கொண்டோர்
இலவசமாய் சென்றுவர
ஏற்பாடுகள் செய்திடுவேன்
இடம் மட்டும் எதுவென்றால்
பெர்முடா முக்கோணந்தான்
மாதக் கணக்கில் சுற்றிவர
நயமான ஏற்பாடுந்தான் ..!

நயாகராவை கங்கையோடு இணைப்பேன்
நைல் நதியை காவிரியோடு இணைப்பேன்
தண்ணீர் பஞ்சம் வராமல் தடுத்து
தமிழகமே செழிக்கச் செய்வேன்..!

கல்விக் கூடம், கோவில் அருகில்
அநியாய மதுக்கடை அழிப்பேன்
வீட்டினில் இருப்போர்க்கு
வேண்டும் மட்டும் விநியோகம்
குழாய்களில் இணைப்பின் வழியே
வற்றாது கொட்டும் மதுவும்
திகட்டாது கிடைக்கச் செய்வேன்..!

நாட்டில் தொழில் வளம் பெருக்கி
வேலையில்லா திண்டாட்டம் போக்கி
ஏழை இல்லா நாடு அமைப்பேன்
எம் புதுமை ஆட்சியிலே
எல்லோரும் செல்வந்தர் தானே..!!

வீட்டுக்குள்ளே தொழில் துவங்க
பண உற்பத்தி இயந்திரங்கள்
இல்லத்திற்கு ஒன்று வீதம்
இலவசமாய் அளித்திடுவேன்..
உற்பத்தி மூலப் பொருட்கள்
தேடித் தேடி அலைதல் வேண்டாம்
கூட்டுறவு அங்காடிதன்னில்
இருபத்து நான்கு மணி நேரமும்
குறைவின்றியே பெறலாம்...!!

இத்தொழிற் சாலை இருக்க
வேறு தொழிற் சாலை எதற்கு..?
வளமோடு வாழுதற்கு
இதுபோதும் என்றே மகிழ்ந்து
வாழ்த்திடலாம் எம் ஆட்சியிலே
வாக்களிப்பீர் மறவாமல்
உங்கள் வாக்கு எங்களுக்கே..!

இலவசமாய் அறுபது மதிப்பெண்
படிப்போர்க்கு கட்டாயம் ஆக்கி
தேர்வினிலே தோல்வி காணா
மேதாவிகளை உருவாக்கிடுவேன்..!

குழந்தை பெற்றுக்கொள்ள
ஒரு இலட்சம் மருத்துவ உதவி..
குழந்தைக்கு தொட்டில் முதலாய்
பால் பொருட்கள் பவுடரும் உண்டு..
அணிவதற்கு ஆடை முதலாய்
"ஆய்" துடைக்க துணியும் தருவோம்..!

இலவச கல்வியோடு
சத்துணவு மூன்று வேளை
கல்வி பயிலும் மாணவர்க்கு
கட்டாயம் ஆக்கப்படும்..!

திருமண வயதினிலே
வகை வகையாய் சீதனங்கள்
தாலியோடு சகலமும் தந்து
இலவசமாய் திருமணமும்..
ஹனிமூன் சென்றுவர
அயல்நாட்டு ஏற்பாடும்
சத்தியமாய் செய்திடுவோம்
மறவாதீர் உங்கள் வாக்கு எங்களுக்கே..!

குழந்தை பிறப்பிலிருந்து
மயான செலவுவரை
அத்தனையும் இலவசந்தான்
குறைவின்றி நாங்கள் செய்வோம்
கணக்கின்றி குழந்தைகளை
கவலையின்றி பெற்றுக் கொள்வீர்..!

இன்னுமென்ன இலவசம் வேண்டும்
எடுத்து சொன்னால் அதையும் செய்வோம்
உங்கள் மீது ஆணையிட்டோம்
எங்களையே தேர்ந்தெடுங்கள்..!

உங்கள் வாழ்வு வளமுறவே
உற்றதுணை நாங்கள்தானே
மறவாதீர் உங்கள் சின்னம்
ஏழுமலையான் அருள் நிறைந்த
எடுப்பான நாமம் சின்னம்..!!

நாமத்திற்கே வாக்களிப்பீர்
நாமத்தோடு நலமே பெறுவீர்..!

எழுதியவர் : சொ.சாந்தி (11-May-16, 10:08 pm)
பார்வை : 151

மேலே