குழந்தையின் சந்தேகம்
ஆறு வயது குழந்தைக்குள்
ஓராயிரம் கேள்விகள்…………….?
“அப்பா! எனக்கு ஒரு சந்தேகம்?”
“என்னம்மா சந்தேகம்”
“அப்பா! சாமி இருக்கா இல்லையா?’’
முதல் பந்தே யாக்கர்தான்
“இல்லை என்று யார் சொன்னார்கள்?’’
“பக்கத்து வீட்டு தாத்தா!’’
“தாத்தா கண்ணுக்கு எல்லாம் சாமி தெரியாது.’’
“உங்கள் கண்ணுக்கு சாமி தெரியுமா அப்பா?’’
அப்பா சமாளித்து தலை அசைத்தார்.
“சாமி என்றால் யார் அப்பா?’’
மீண்டும் ஒரு யாக்கர் பந்து.
அப்பா சாமி படம் ஒன்றைக் காட்டினார்.
“இந்த சாமிக்கு டாடி மம்மி யார்?’’
“டாடி மம்மி கிடையாது.’’
“இந்த சாமி எந்த ஸ்கூல்ல படிக்கிறார்?
இந்த சாமிக்கு மிஸ் யார்?’’
பந்து வீச்சு கடுமையாக இருந்தது
“சாமி பள்ளிக்கெல்லாம் போகமாட்டார்.’’
“சாமி போலீஸ் மாமாவுக்கு பயப்படுவாரா?’’
“ஏன் பாப்பா அப்படி ஒரு கேள்வி?’’
‘’நான் தப்பு செஞ்சா சாமி கண்ணை குத்துமாம்’’
‘’தவறு - யார் சொன்னது அப்படி?’’
‘’எங்க ரேவதி மிஸ் சொன்னாங்க.’’
‘’சாமி யார் கண்ணையும் குத்தாது.’’
‘’அப்போ மிஸ் பொய் சொல்றாங்களா?’’
‘’நீ தவறு செய்யக்கூடாது
நீ நல்லா படிக்க வேண்டும் என்று
மிஸ் அப்படி சொல்லி இருக்காங்க.’’
அப்பா சிரமப்பட்டு பந்துவீச்சை சமாளித்தார்.
பக்கத்து வீட்டு தாத்தா
ஏன் சாமி இல்லை என்று சொன்ன
காரணம் அப்போது தான் அப்பாவுக்கு புரிந்தது!