சிறுமி

அந்தக் கள்ளி
பால் கொடுத்தாள்
ஆம் .....
கள்ளிப்பால் கொடுத்தாள்
பிறந்தது
பெண் சிசு என்பதால்!

ஆண் பிறந்தால்
தேடுவார்
தொட்டில் கயிறு.
பெண் பிறந்தால்
போடுவார்
தூக்குக் கயிறு!

தப்பிப் பிழைக்கும்
சிறுமியோ
குப்பைத்தொட்டியில்!

பெண் என்ன குப்பையா
குப்பையோடு குப்பையாய்
வீச!

அந்தச் சிறுமி
அப்பா அம்மாவின்
அடையாளம்!
ஆனால்.............
அனாதை இல்லத்தின்
அவதாரம்!

மண்ணாலும் அரசுதான்
அவளுக்கு மாற்றாந்தாய்!

அட்சயப் பாத்திரம்
எனும் அன்னையின்
கைகளில்
பிச்சைப் பாத்திரமாய்
பிள்ளைகள்!

இந்த உலகத்தில்
அந்த சிறுமிக்கு
கிடைத்தப் பாத்திரம்
ஒவ்வொரு வீட்டிலும்
பாத்திரம் தேய்க்கும்
பாத்திரம்!

பாலியல் கொடுமையால்
பள்ளிக்கூட அறையும்
அவளுக்கு
பள்ளியறை ஆனதே!

விபச்சார சிறையில்
வேதனை இருளில்
விடுபடாத நிலையில்
அவள் வெந்து சாகிறாள்!

எய்ட்சுக்கு
ஏது மருந்து
அதற்கும் அவள்தான்
விருந்து!

பச்சைக்கிளியின்
தலைமேல் போடும்
பாறாங்கல்லாய்
பால்யதிருமணம்!

பூப்பெய்தாத
அந்தப் பூந்தளிர்
பூட்டிய வீட்டிற்குள்
புருஷன் மடியில்!

முட்டை இடுவதற்குள்
மூக்குக் குத்தப்படும்
கோழிக் குஞ்சு அவள்!

முளையிலேயே
முறிக்கப்படுகிற
விதையிலிருந்து
விளையுமா
விருட்சம்!

ரத்த சோகத்திலும்
ரத்த சோகையிலும்
அவள் சோர்ந்து
திரிகிறாள்!

வழுக்கும்
அவள் வாழ்க்கை
வண்ணத் தொட்டிகளில்
இன்னும் மீளமுடியாத
மீன் குஞ்சுகளாய்!

எழுதியவர் : ஜெயபாலன் (13-May-16, 2:30 pm)
Tanglish : sirumi
பார்வை : 238

மேலே