குருட்டுசேத்திரம்

குருட்(டு)சேத்திரம்
=========================================ருத்ரா

பதினெட்டு நாள் யுத்தம் என்றார்கள்.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக‌
அந்த பதினெட்டு நாட்கள்
முடியவே இல்லை.
ஒரு இனம் இன்னொரு இனத்தின் மீது..
ஒரு மொழி இன்னோரு மொழியைத்தின்று..
ஒரு கடவுள் இன்னொரு கடவுள் மீது..
மனிதன் மனிதனின் மீதே
வில் அம்பு பாய்ச்சி..
கன்னங்கள் புடைக்க‌
பாஞ்ச ஜன்யங்கள் ஊதி முழக்கி...
யுத்தம் செய்வதே
உன் மதம் என்று உபதேசங்கள்
லட்சக்கணக்கான ஸ்லோகங்களில்
நூற்றுக்கணக்கான பாடல்களில்
ஒலித்துக்கொண்டிருப்பதே
நம் "புண்"ணிய பூமி.
பாருங்கள்..
தேர்தலுக்கு முன்
ஓய்வு என்று
நம் ஆயுதங்களை மட்டுமே
கிடத்தி வைத்திருக்கிறோம்.
நம் நெஞ்சமெல்லாம்
ஒருவன்
அடுத்தவனை
அடித்துத் தின்னும்
பொருளாதாரத்தின்
பள பளப்பான வேட்டைக்காடுகள்.
யார் தருமன்?
யார் துரியோதனன்?
யார் பாரம்பரியத்தை
வெறும் சவமாக
காப்பாற்றிக்கொண்டிருக்கும்
பீஷ்மன்?
தெரியவில்லை.
வெறும்
வெறியின்
முகமூடிகள் மாறி மாறி
முகம் மறைத்து
யுத்தம் செய்கின்றன.
புல்லாங்குழலின் ஓசைக்குள்ளுமா
ஒரு துருப்பிடித்த சாணக்கியத்தனம்?
மகுடம் எல்லாம் வேண்டாம்.
அன்பளிப்பாய்
ஒரு எவர்சில்வர் குடம் போதும்
என்கின்ற மக்கள் ஒரு புறம்.
வெள்ளம் எங்களை மூழ்கடித்தாலும்
வருண பகவானுக்கு
யாகம் மட்டுமே செய்யதெரிந்த‌
மந்தைகள் ஒரு புறம்.
நீங்களே
மகுடத்தை ஜெயிக்க நினைத்தாலும்
அபினி தோய்த்து எழுதிய‌
எங்கள் வாக்குறுதிகளில்
மகுடி ஊதி
உங்களை மயக்குவதே
எங்கள் பணி என்று
எகிறி வருகிறவர்கள் ஒரு புறம்.
சந்தைத்திடல் ஆகிப்போன‌
இரைச்சல்களத்தில்
இது
"விலையில்லா ஜனநாயகம்"
என்ன செலவு இங்கே?
விரலில்
ஒரே ஒரு புள்ளியைத்தவிர!
"தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்...
"தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்...
"தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்...
........................................
.............................................."
"யார்ர்ரா அது?
கீறல் விழுந்த ரிக்கார்டை
மாத்தித்தொலைடா.."
================================================

எழுதியவர் : ருத்ரா (14-May-16, 11:28 am)
பார்வை : 51

மேலே