வயிறு இருக்குலவயிறு சிறுகதை

வண்டியை நிறுத்துவது அந்த இடத்தில் கடினமாக இருந்தது. அப்படி ஒன்றும் மதுரையின் மையத்தில் உள்ள பகுதி இல்லை. ஒரு இருபது வருடத்துக்கு முன்னால் வயலாக இருந்த மதுரை கிருஷ்ணாபுரம், மகாத்மா காந்தி நகர் பகுதிதான். வரிசையாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்ட நிலையில் , கொஞ்சமாக இருந்த இடத்தில் வண்டியை நுழைத்து, வண்டியை இழுத்து நிறுத்திவிட்டு, கூடையை எடுத்துக்கொண்டு அந்த டிபன் சென்டருக்குள் நுழைந்தான் மணி. ஏதோ மியூசிக் பார்ட்டியில் டிரம் அடிப்பதுபோல டம, டம, டம, டம, டம்,டம் டம், டங்க் என கொத்து புரோட்டாவை கொத்திக்கொண்டிருந்த மாஸ்டர் வெற்றி, மணியைப் பார்த்தவுடன் ஒரு கணம் தனது கொத்து புரோட்டா இசையை நிறுத்திவிட்டு ' வாங்க சார் வாங்க,வணக்கம் ' என்றார். மணியும் பதிலுக்கு வணக்கம் வைத்தான். தொடர்ந்து தனது கொத்து புரோட்டா இசையை ஆரம்பித்த புரோட்டா மாஸ்டர், சப்ளையரிடம் ' சாருக்கு 25 புரோட்டா, பத்து தோசை பார்சல் ' என்றார் .

'ஏங்க , வீட்டுக்கு நேற்று விருந்தாளிகள் எல்லாம் வந்திருந்தாங்க, அதனாலே நிறைய வாங்கிட்டுப்போனேன், இன்னைக்குமா , வாங்குற சம்பளத்துக்கு முழுவதும் புரோட்டாவா ? இன்னைக்கு 5 புரோட்டா, இரண்டு தோசை மட்டும் ' என்று ஆர்டர் பண்ணி விட்டு நின்றுகொண்டான் மணி.

அந்த டிபன் கடைப்பெயர் என்னவோ'ராயல் டிபன் சென்டர் ' என பெத்த பேரா இருந்தாலும், க்டை இருந்தது என்னவோ ஒரு எட்டுக்கு எட்டு அறை. அந்த அறையில் வலது பக்கம் போடப்பட்டிருக்கும் இரண்டு மேசைகள். ஒரு மேசைக்கு அந்தப்பக்கம் இரண்டு நாற்காலிகள், இந்தப்பக்கம் இரண்டு நாற்காலிகள் என 4 பேர் உட்கார்ந்து சாப்பிடலாம். இரண்டு மேசைக்கும் சேர்த்து மொத்தமாக 8 பேர் ஒரே நேரத்தில் உட்கார்ந்து சாப்பிடலாம். மேசைகளுக்கு கிழக்கே ஒரு சின்ன மேசை , அதன் மேலே இலைக்கட்டுகள், பரிமாறப்பயன்படும் பாத்திரங்கள் அப்புறம் கடைசியில் மொத்தமாக புரோட்டாக்களை போட்டுவைக்க ஒரு வட்டகை . அறையின் இந்த மூலையில் ஒரு சின்ன மேசை, மேசைக்கு முன்னால் கடையின் ஏக போக முதலாளி, அந்த மேசைதான் கல்லாப்பெட்டி. அந்தக் கல்லாப்பட்டிக்கு முன்னால் உட்கார்ந்திருந்த முதலாளியிடம் சப்ளையர் ,' அண்ணனுக்கு இன்னைக்கு பார்சல் 5 புரோட்டா, இரண்டு தோசை மட்டும்." என்று சொல்ல , புரோட்டா மாஸ்டர் ' நாளைக்கு பார்சல் 10 புரோட்டா, 10 ஸ்பெசல் தோசை ' என்று சொல்ல மணி , சப்ளையர் , முதலாளி என்று அனைவரும் சிரிக்க வேலை மிகவும் மும்மரமாக நடந்து கொண்டிருந்தது.

டிபன் கடைக்கு முன்னால் புரோட்டா மாஸ்டர் வெற்றி நின்று வேலை செய்துகொண்டிருந்தார். மேற்கே பார்த்து அவர் நின்றுகொண்டிருக்க , அவருக்கு முன்னால் புரோட்டா மாவைப் பிசையும் பித்தளைத் தகரம் இருந்தது. அதில் ஒரு பக்கம் புரோட்டா மாவும் , இன்னொரு பக்கம் அவர் உருட்டிப் போட்ட புரோட்டா மாவு உருண்டைகளும் கிடந்தது. அவர் இடது கைப் பக்கத்தில் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. நல்ல விறகு அடுப்பு. நமது வீட்டு தோசைச்சட்டி 4, 5 சட்டியை ஒன்றாய் சேர்த்து போட்டதுபோல பெரிய அடுப்பு தக தகவென எரிந்து கொண்டிருந்தது. அதில் புரோட்டாவை ஏற்கனவே தட்டிப்போட்டிருந்தார். இந்தப் பக்கம் பேசிக்கொண்டே ஒரு பக்கம் வெந்த புரோட்டாக்களை அடுத்த பக்கத்துக்கு திருப்பி போட்டுக்கொண்டிருந்தார். அந்தப் புரோட்டாக்கள் வேகும் நேரத்திற்குள் ஏற்கனவே உருட்டிப்போட்டிருந்த புரோட்டா மாவு உருண்டைகளை சுழற்ற ஆரம்பித்தார். அப்படியே ஏதோ ராட்டினம் சுற்றுவதுபோல புரோட்டா மாவை வீசி, வீசி இலேசாக்கி மறுபடியும் அதனை ஒன்று சேர்த்து புரோட்டா வடிவத்தில் ஆக்கினார். அப்படியே ஒவ்வொரு புரோட்டா மாவு உருணடைகளும் புரோட்டா வடிவங்களாகிக் கொண்டிருந்தன. அதற்குள் அடுப்பில் இரண்டு பக்கமும் வெந்திருந்த புரோட்டாக்களை திருப்பித் திருப்பி போட்டு விட்டு மொத்தமாக எடுத்து பித்தளைத் தட்டில் போட்டு , சூட்டோடு இருக்கும் புரோட்டாக்களை இரண்டு கைகளாலும் சேர்த்து தட்டினார் . தட்டிப்போட்டு பக்கத்தில் இருக்கும் சட்டியில் தூக்கிப்போட்டார். அதற்குள் சப்ளையர் ' மாஸ்டர், லைனுக்கு இரண்டு ஆம்லேட் ,ஒண்ணு நிறைய வெங்காயம் போட்டு, ஒண்ணு வெங்காயம் போடாமல் ' என்றார். அப்படியே வலது கைப்பக்கம் திரும்பி , வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த முட்டைகளில் இரண்டை எடுத்தார். ஒன்றை அப்படியே சூடாக இருக்கும் அடுப்பில் ஊத்திவிட்டு, இன்னொரு முட்டையை ஒரு செம்பு மாதிரி இருந்த பாத்திரத்தில் ஊற்றி , வெங்காயம் நிறைய அள்ளிப்போட்டார். கொஞ்சம் உப்பைப் போட்டு ஒரு கலக்கு கலக்கி விட்டு அப்படியே அடுப்பில் ஊற்றினார். அடுப்பில் இருந்த இன்னொரு ஆம்லேட்டிற்கு கொஞ்சம் உப்பைத் தூவினார்.

ஆம்லேட்டை தூக்கிக் கொடுப்பதற்குள், உள்ளிருந்து மூன்று தோசை ஆர்டர் வந்தது. கையில் கீழே இருந்த எண்ணெய்சட்டியை எடுத்தார். சள், சள் என்று கல்லில் எண்ணெயை விட்டு விட்டு, முட்டைக் கூடைக்கு அருகில் இருந்த தோசை மாவு வாளியில் இருந்து ஒரு கரண்டியில் மாவை அள்ளி தோசைக்கல்லில் ஊற்றினார். அப்படியே பரப்பி வேக வைத்துவிட்டு, அடுத்த தோசைக்கு மாவை ஊற்றினார் ,இப்படியே ஒரு நேரத்தில் மூன்று தோசைகளை வேகவைத்துக் கொண்டிருந்தார் கல்லில் . வெந்து கொண்டிருக்கும் தோசைகளுக்கு மேலே எண்ணெயைத்தூவினார். அப்படியே முறுகலாக வெந்த தோசைகளை திருப்பியெல்லாம் போடாமல் மடக்கி வட்டகைக்குள் போட்டார். ரெண்டு தட்டு, வட்டகையை தோசைக்கரண்டியால் தட்ட சப்ளையர் ' வாரமெல , அதுக்குள்ளே தட்டா, ஒன்னோட துய்ரமய்யா ' என்று சொல்லிக்கொண்டே தோசையை எடுத்துக்கொண்டு போனார்.

மணி வரும்போதெல்லாம் கவனித்திருக்கிறான். இந்த புரோட்டா மாஸ்டருக்கும் , சப்ளையருக்கும் இருக்கும் புரிதலை, நகைச்சுவையை.ஏதோ இசைக்கருவிகள் இரண்டு இணைந்து எழுப்பும் இசை நாதம் போல , இருவரும் இணைந்து செய்யும் வேலை வாடிக்கையாளர்களை ஈர்த்துக்கொண்டிருந்தது. அப்போது எப்போதும் கடைக்கு வந்தால் ' நாலு இட்லி ' மட்டுமே சாப்பிடும் அய்யாவு உள்ளே வந்து சாப்பிடக் கை கழுவிக் கொண்டிருந்தார். அவரைக் கவனித்த மாஸ்டர் ' அய்யாவுக்கு என்ன ஸ்பெஷல் நெய் தோசையான்னு கேளுங்க, சட்டென்று போட்டு விடலாம் ' என்றார். அவர் அய்யாவுகிட்ட ' என்னங்க வெறும் ஸ்பெஷல் தோசையா, நெய் ஸ்பெஷல் தோசையா ' என்று கேட்க ' ஏய் , கேலி பண்ணாதிங்கப்பா, 4 இட்லி மட்டும் கொடுங்க ' என்றார். இட்லியை வைத்து நிறைய சாம்பார் , சட்னி ஊத்தி வகையாக அவர் சாப்பிட சப்ளையர் வழி செய்து கொண்டிருந்தார். வருகிறவர்களிடம் கொஞ்சம் உரிமை, கொஞ்சம் கேலி, கிண்டல் அதிகமான உபசரிப்பு என இருவரும் இணைந்து செயலாற்றுவதால் , முதலாளிக்கு அதிகம் வேலை இல்லாமல் வருமானம் வந்து கொண்டிருந்தது.

கூட வேலை பார்க்கும், மாதம் அதிகச்சம்பளம் வாங்கும் தனது அதிகாரியை இந்தக் கடைக்கு அழைத்து வரவேண்டும் என்று நினைத்தான் மணி. வருமானம் கூடவோ, கொஞ்சவோ எவ்வளவு உற்சாகமாக வேலை செய்கிறார்கள் இந்த இருவரும். அதுவும் மாஸ்டர் வெற்றி அடுப்பிற்கு முன்னால் எவ்வளவு நேரம் நிற்கிறார்.காற்றாடி எல்லாம் தலைக்கு மேலே சுற்றவில்லை. ஒரே வெப்பம்தான் அடுப்பினால். சட்டை இல்லாமல் வெறும் பனியனோடு நின்று கொண்டுதான் மாஸ்டர் வேலை பார்க்கின்றார். இவனுக்கு தெரிந்து மாலை 6 மணிக்கு நிற்க ஆரம்பித்தால் இரவு 10, 11 மணி ஆகிவிடும் எல்லாம் விற்றுத்தீர்வதற்கு. இடையில் , இயற்கை அழைப்புகளுக்குத் தவிர வேறு எங்கும் போவதாகத் தெரியவில்லை. ஒரு நாள் மணி கேட்டான். "6 மணிக்குத் தான் கடைக்கு வருவீர்களா" என்று. "அண்ணே, நீங்க வேற , நான் 3 மணிக்கே வந்துடுவேன். வந்து புரோட்டா மாவை பிசைந்து வைக்கணும், புரோட்டா குரூமா தயாரிக்கணும் ... "என்று சொன்னார். அப்ப மாலை 3 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரைக்கும் வேலை, எவ்வளவு சம்பளம் என்றான். ஒரு நாளைக்கு 500 ரூபா என்றார் புரோட்டா மாஸ்டர்.

உடனிருந்த சப்ளையர் "அண்ணே, மாஸ்டர் இங்கு மட்டும் வேலை பாக்கிறார்ன்னு நினைக்காதிங்க, காலையில் ஒரு புரோட்டாக் கடையில் வேலை பார்க்கிறார்" என்றவுடன் , மணிக்கு தூக்கி வாரிப்போட்டது." காலையில் ஒரு கடையா ? "என்றான். "ஆமாம் , கீழ மாசி வீதியில் அந்த எண்ணெய்க்கடைக்கு பக்கத்தில் இருக்கும் கடையில் வேலை பார்க்கிறார் "என்றவுடன் , ஆமான்னே, பூராம் சுமை தூக்குற, எறக்கிற ஆளுக இருக்கிற ஏரியா, அங்க காலையிலேயே வந்து புரோட்டா சாப்பிடுவாங்க, இதே மாதிரிதான் அங்க காலையில் 6 மணிக்கு போயிட்டு மத்தியானம் இரண்டு மணிக்கு வருவேன் "என்றார். அடப்பாவிகளா, ஒரே நாளில் இரண்டு இடத்தில்,15-16 ணி நேரம் இந்த அனலில் வேகுற வேலையா ? என்று மனதிற்குள் ஓடியது. "எப்படி இப்படி முடிகிறது" என்றான் மணி

அப்படியே தோசைக்கரண்டியாலேயே வயிற்றைக் காட்டியவர், வயிறு இருக்குல, என்னை நம்பி வீட்டில 5 வயிறு இருக்கல என்றவர், வயதான எங்க அப்பா, அம்மா எங்கூட இருக்காங்க, பிள்ளைகள் இரண்டு பேரும் படிக்கிறாங்க, வீட்டிக்கார அம்மாவும் ஏதாவது கூலி வேலைக்குப்போகும், இல்லைன்னா வீட்டில இருக்கும், நான் அங்க ,இங்கேன்னு வேலை பாக்குற இடத்திலே சாப்பிட்டுக்கிறேன்.என்னையைத் தவிர 5 வயிறு மூணு நேரம் சாப்பிடனும்ல, நம்ம என்ன டாட்டா, பிர்லா பரம்பரையா -உட்கார்ந்து சாப்பிடறதுக்கு, உழைக்கணும்னே , உழைக்கணும் -இந்த ஒருச்சாண் வயித்துக்கு உழைக்கணும்ல என்று சொல்லிக்கொண்டே புரோட்டாவை வீசிக்கொண்டிருந்தார். பார்சலை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்ட மணி ஒரு நாலைந்து நாட்கள் டிபன் கடைக்குப் பக்கம் போகவில்லை.

அடுத்த வாரம் போன போது மாஸ்டரைக் காணவில்லை. வேறு ஒரு மாஸ்டர் புரோட்டா வீசிக்கொண்டிருந்தார். எப்போதும் உற்சாகமாக இருக்கும் சப்ளையர் சோர்வாக இருந்தார்.பார்சலுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு, சப்ளையரிடம் எங்கே புரோட்டா மாஸ்டர் வெற்றியைக் காணோம், ஊருக்குப் போயிட்டாரா ? என்றதும் " ஊருக்கு டிக்கெட் வாங்கத் தெரிஞ்சாரு " என்று சொல்லி நிப்பாட்டிய சப்ளையர் அருகில் வந்து 'திடீர்ன்னு ஹார்ட் அட்டாக் , ஆஸ்பத்திரியில் இருந்து , இன்னைக்குத்தான் வீட்டிற்கு வந்திருக்கிறாரு " என்று சொன்னவுடன் ஒரு மாதிரியாக இருந்தது , அவரிடம் முகவரியை வாங்கிக் கொண்ட மணி காலையில் அவரைத் தேடி வீட்டிற்கு போனான்.

மதுரை, பந்தல் குடியைத் தாண்டி செல்லூருக்குள் அவர் வீடு இருந்தது. மொத்தமாய் சாக்கடைகள் வந்து இணையும் அந்த சாக்கடையைத் தாண்டித்தான் மணி போனான். சாக்கடை ஓடைக்கு மேலேயே வீடுகளும் , குடிசைகளும் இருந்தன. துர் நாற்றம் அடித்தது. கொஞ்ச நேரம் கடந்து போவதற்கே நாம் சலித்துக்கொள்கிறோமே, இங்கேயே வாழ்பவர்கள், இந்தக் குடிசைக்குள் இருந்து படிப்பவர்கள் என்று நினைத்துக்கொண்டே மாஸ்டர் வெற்றியின் வீட்டை அடைந்தான் மணி.

சின்ன சந்துக்குள் வரிசையாக இருக்கும் காம்பவுண்டு வீட்டிற்குள் அவரது வீடும் இருந்தது. அவரின் மனைவிக்கு மணியைத் தெரியவில்லை. அறிமுகம் இல்லைதானே , அறிமுகப்படுத்திக்கொண்டவுடன் அழைத்துச்சென்றார். வீடு ஒரு இரண்டு பத்துக்கு பத்து அறைகளாக இருந்தது. ஒன்றில் இவர் படுத்துக்கிடந்தார். மணியைப் பார்த்தவுடன் புன்னகைக்க முயற்சித்தார். முடியவில்லை. உடம்பில் இருந்த வலியெல்லாம் திரண்டு முகத்தில் வழிந்தது. அவரது மனைவி அவரின் மெடிக்கல் ரிப்போர்டை எடுத்துக்கொண்டு வந்து காண்பித்தார். ஆஞ்சியோ எடுத்து , அடைப்பு இருப்பதைக் கண்டு பிடித்திருந்தார்கள். அடைப்பு எடுக்க இன்னும் இரண்டொரு நாளில் வரச்சொல்லி இருக்கிறார்கள் என்றார்கள். கையில் கொஞ்சம் பணத்தைக் கொடுத்தபோது அவரது மனைவி வாங்க மறுத்தார். புரோட்டா மாஸ்டர் சைகை காட்டியவுடன் வாங்கிக் கொண்டார். அவரின் பெற்றோர்கள் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து இருந்தவர்கள்' எம்பிள்ளை நல்லாகணும் ' என்று கைகூப்பினார்கள். மருத்துவ செலவுக்கு என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது முன்னாள் முதலமைச்சரின் பெயரைச்சொல்லி, அவர் பெயரில் இருக்கும் காப்பீட்டுத்திட்டத்தில் இலவசமாகவே செய்து கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்கள், ஆஞ்சியோ எடுத்ததற்கான செலவை அப்படித்தான் கொடுத்தார்கள். அறுவை சிகிச்சை செய்துவிட்டு ஒரு மூன்று மாதம் ஓய்வு எடுத்தால் இயல்பாகி விடும் என்று சொல்லியிருக்கிறார்கள், நான் இப்போது தொடர்ச்சியாக கூலி வேலைக்கு செல்கிறேன் என்று அந்த சகோதரி சொல்லிக்கொண்டிருந்தார். கேட்டுவிட்டு அமைதியாக அந்த வீட்டை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தான் மணி. ரோட்டில் நின்றிருந்த காரில் உட்கார்ந்திருந்த ஒருவர் சத்தமாக 'இலவசமா எதையுமே இந்த நாட்டிலே செய்யக்கூடாது ,அதனால்தான் இந்த நாடு கெட்டுப்போச்சு' என்று ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டிருந்தார்

எழுதியவர் : வா.நேரு (17-May-16, 8:45 pm)
சேர்த்தது : வா. நேரு
பார்வை : 272

மேலே