அக்னிக் குஞ்சுகள்

வளரும் சிறகுகள்
பறக்கும் முன்பே
முறிந்து போகின்றன.
வறுமையின் வரைகோலமிதுவோ,,,?

படிக்கும் சுவடியறியா
வேலைச் சுவடிகள் இவர்கள்.
காலத்தின் ஓலைச் சுவடிகள்.!

சில்வண்டுகளின் அழுகுரல்
ஒலியாக
இவர்களின் வாழ்க்கை.

காலச்சூழலில்
கைவிரிக்கப்பட்ட எதிர்காலங்கள்.

கேள்விக்குறியாய்
முதுகு வளைந்தாலும்
குடும்பம் சுமக்கும்
கோணல் தெய்வங்கள்

பத்துவிரல் தேய
பசித்திருக்கும் சிறுவயிறு ஏங்க
பீடிசுருட்டியே
முடங்கிப் போகும்
தெய்வீக முகாரிகள்…

ஏழ்மையென்பதே
இவர்கள் நேசம்..
அந்த பீடிவாசமே
மூக்கின் சுவாசம்..!

காலநேரம் பார்க்காமல்
கற்குழிக் குஞ்சுகளாய்
கானலில் அழிந்து போகும்
சின்னஞ்சிறு கற்பூர பொம்மைகள்..!

பொம்மைகள் பிடிக்கும்
வயதில்
குடும்பச்சுமையை
தோளில் தாங்கிய
முதலாளிகளின்
கைப்பொம்மைகள்.. !

உளிபிடிக்கும் இளம்கைகளில்
உதிரம் கசிந்தாலும்
உதரவிதானம் உடைய
கரும்பாறைகள் பிளக்கும்
நெருப்பு வாழ்க்கைக்குள்
இவர்கள்
சுட்ட செங்கற்களாய்…..!

சூளைக்குள் சிதையாய்
எழுதாத சோகங்களையும்
சேர்த்தே அனுபவிக்கும்
சுடாத பிஞ்சு மனங்கள்..!

சூட்டில் மடியும்
சோகமய வாழ்க்கை.
சொல்லி அழுதாலும்
தீராது வேதனை.

பார் உலகே பார்…
வறுமைச் சூழ்நிலையில்
செத்துமடியும்
இவர்கள்
எங்கள் பாரதியின்
அக்னிக்குஞ்சுகள்…!

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (19-May-16, 3:38 pm)
Tanglish : aknik kunjukal
பார்வை : 1691

மேலே