என்னை நான் பார்க்கும் போது

பிறந்தபயன் உணராது பிதற்றும் என்னை
பிடித்துவந்து நெஞ்சமதைப் பேச வைத்தார்
இறக்கவில்லை இருக்கின்றேன் என்ப தன்றி
இனியசெயல் எதுவொன்றும் செய்ய வில்லை
மறந்துவிட்டேன் நற்செயல்கள் என்ன வென்று
மனிதநேயம் என்றொன்றும் இருக்கு தாமே?
அறநிலையும் அன்பினையும் அறிந்த தில்லை
அறிந்தோரே இன்றெனக்குச் சொல்ல லாமா?

உத்தமனாய் வாழ்வினிலே உயரா தென்றும்
உன்மத்தம் பிடித்தவனாய் உருக்கு லைந்தேன்
தத்துவத்தைச் சாக்கடையில் தள்ளி விட்டு
தறுதலையாய் ஆனதுதான் தவறு அன்றோ ?
நித்தம் நித்தம் நேர்வழியை ஒதுக்கி விட்டு
நெடுமுள்ளில் நான்நடக்க நன்மை ஏது?
பித்தத்தில் பிதற்றுவதாய் நீங்கள் என்னை
புரிந்துகொண்டால் பிழையில்லை உண்மை என்பேன்.

மனிதனையே மதப்பேய்கள் மயக்கி வைத்து
மானுடத்தை அழித்திடவே துடித்து நிற்க
இனிதான மனிதநேயம் என்னில் தூங்க
இம்மண்ணில் நிலைத்திடுமோ அமைதி என்றும்
புனிதத்தின் இருப்பிடமாம் புத்தன் அன்று
பிறந்துவந்த போதினிலும் பயன்கள் இல்லை
இனிஎன்றும் என்நிலையில் மாற்றம் காண
எவரேனும் உள்ளேரேல் எழுந்து வாரீர் !

சாதிகளின் சங்கடத்தில் தவிக்கும் என்னை
சமத்துவத்தின் நல்வழிக்கு அழைப்பார் யாரோ?
நீதிஎன்று நாட்டினிலே எதுவும் இல்லை
நிம்மதியும் உள்ளத்திலே துளியும் இல்லை
பாதிக்கும் தீச்செயல்கள் என்னைச் சுற்ற
பாவத்தைச் செய்யாமல் இருத்தல் உண்டோ ?
போதிக்க காந்தியர்கள் பிறந்தால் கூட
புதுவாழ்வு எனக்கினிமேல் குதிரைக் கொம்போ ?

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (19-May-16, 10:33 pm)
பார்வை : 86

மேலே