இறந்துபோனவளின் மிச்சம்
இறந்துபோனவளின் மிச்சம்
******************************************
அந்த சூதாட்ட மந்தையிலும்
சாராயக்கடையிலும்
எல்லோரும் கேலி செய்ய
நீ மட்டும் எனக்காய்
பரிந்து பேசிருக்க வேண்டாம்
நீ ஒருவன்
அங்கிருப்பதையே
காணாமல் சென்றிருப்பேன்
என் அண்ணன் இருப்பானென
வாசல் வரை வந்துவிட்டு
என்னைக் கண்டதும்
நீ விலகி சென்றிருக்க வேண்டாம்
உன் நிழலை
என் பாதம் படுமிடத்தில்
அனுமதித்திருக்க மாட்டேன்
அம்மாவை அடித்து
பணம் நகை கையாடிய
என் அண்ணனை
நான் பார்க்க நீ
அவன் அடி வயிற்றில்
எட்டி மிதித்திருக்க வேண்டாம்
நான் பள்ளி விட்டுவரும்
அந்த வழப்பமான நான்கு மணி அளவில்
பயத்தினால் அலறி உன்னால்
வயதிற்கு வராமல் இருந்திருப்பேன்
அந்த நிகழ்வுக்குப் பின்னால்
நீ எதிர்ப் படுகையில்
வெட்கப் படாமலாவது இருந்திருப்பேன்
பண்டிகை நாட்களில்
என் பாட்டுக்கு
எச பாட்டு எழுதும்படி
உன் கவிதைகள்
இருந்திருக்க வேண்டாம்
உனக்கு நான்
ரசிகையாகாமல் போயிருப்பேன்
பத்தாம் வகுப்பு பரீட்சையில்
பள்ளிக் கட்டணம் செலுத்த
கதியில்லாத எனக்கு
உன் மோதிரத்தை குடுத்திருக்க வேண்டாம்
உன்னை மனிதனாக
மதிக்காமல் இருந்திருப்பேன்
ஊர்ப் பெண்களுக்கெல்லாம்
நீ படுக்கைப் பொறிக்கியாக இருந்துவிட்டு
என் கழுத்தோடு மட்டும்
உன் கண்ணிய கையிற்றை
இறுக்கியிருக்க வேண்டாம்
உன்னை ஆண்மகனாக பார்க்காமல்
இருந்திருப்பேன்
நான் உன்னிடம்
பேசும் ஒவ்வொரு நாளிலும்
யார் யாரோ உன்னைப்பற்றி
என்னிடம்
அவதூறுகள் கூறியிருக்க வேண்டாம்
உன் இறந்த காலம்
எனக்கு தெரியாமல் இருந்திருப்பேன்
தோழி சொன்னாளே என்று
நானும் நீயும்
எழுதிப்பார்த்த வரிகளை
இணைத்துப் பார்த்து உறக்கமிழந்து
உன் நினைப்புகளோடு
என்னை காவு
கொடுத்திருக்க வேண்டாம்
உன்னை நேசிக்காமல் இருந்திருப்பேன்
நாளை என்னை
யாரோ முகம் தெரியாதவர்கள்
மோதிரம் மாற்றி
நிச்சயம் செய்ய வருகிறார்கள்
என்றபோது
உன் நண்பனின் மீதான
நட்பு கோடு
என் காதல் கோட்டை
விழுங்கி அழித்திருக்கவேண்டாம்
ஒரு பொய் சொல்லியிருந்தால் போலும்
இன்று நான்
இறந்து போகாமல் இருந்திருப்பேன் ம்ம்
"பூக்காரன் கவிதைகள்"