மீட்டுவிடு இறைவா

++++++++++++++++
வீட்டுக்காரரகளை எல்லாம்
வெளியேற்றிவிட்டு பலவந்தமாக
குடியேறிவிட்ட வெள்ளத்தால்
தைரியசாலிகளும்
கோழைகளாய் நடுத்தெருவில்

சொந்த தேசத்துக்
குடியுரிமை மறுக்கப்பட்ட
பிரஜையைபோல்
சொந்த வீட்டில் வாழும்
உரிமை மறுக்கப்பட்டாகி விட்டது

உடமைகளை ஆக்கிரமித்துக்கொண்டு
கடமைகளுக்கு கதவடைத்து
உயிரில் எண்ணெய் வார்த்து
எரிய வைக்கிறது வெள்ளம்

வாகனப் பாதைகள் எங்கும்
இலவச படகுகள் பயணிக்கின்றன
வீடுகள் படகுத்துறையாய்.

அகதிகளாய் இருந்தோம்
ஒரு காலத்தில்
முகாம் இட்டார்கள்
முகாமுக்குள்ளும் வெள்ளம்
எங்கே செல்வோம் ...

எங்கள் துயரங்களின்போது
உன் ஆலயங்களில் சரணடைந்து
ஆறுதல் கொண்டோம்
இன்றுன் ஆலயங்களும் நீருக்குள்
இனி நாம் எங்கு செல்வோம்.

இயற்கை அனர்த்தத் தாண்டவங்கள்
ஆடிக்காட்டும் ஆண்டவனே
உன் மேடைகளில் குடியிருக்கும்
எங்களில் உன் பாதங்கள்
படாதவாறு ஆடிவிடு ..

உன் பாராமையால்
குழந்தைகள் சிறுவர்கள் தாய்மார்
கர்ப்பிணிகள் முதியோர் என
அத்தனைத் தரப்பும் அல்லாட
நல்லாவே இல்லை உன் நாட்டியம் ,

போதும் ஆண்டவனே
துன்பங்களை வாழ்வாக கொடுத்தது

தொடர் மழையால் நதிகள்
பெருக்கெடுத்த வெள்ளமாய்
தொடர் கண்ணீரால் நதிகள்
கடலாவதிலிருந்து எங்களை
மீட்டு விடு..
ஏதோ நாங்களும் கொஞ்சம்
வாழ்ந்து விட்டுப்போகிறோம்

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (22-May-16, 3:15 am)
பார்வை : 113

மேலே