காதலொருத்தியைக் கை பிடித்தே… -
‘சார்’!
‘யாரு?’ வாயிற்புறம் வந்தேன்.
‘என் பேரு வாமனன். இதோ அந்த வீட்டில் இருக்கேன்.’
‘பெயருக்கு ஏத்தாப்பலே குட்டையா இல்லாம உசந்து இருக்கியே?’ உன்னைப் பார்த்திருக்கேன்.’
‘நான் பேசணும்.’
‘மேடை போட்டுத் தரவா?’
‘இல்லே…உங்களிடம் ரகசியமாப் பேசணும்’
‘தெரிஞ்சுதான் வந்திருக்கேன். வீட்லே யாரும் இல்லே. தாராளமாய் பேசு. உள்ளே வா.’
அறையில் நுழைந்து மின் விசிறியின் ஸ்விட்சை அழுத்தினேன்.
‘உட்காரு’
வாமனன் நாற்காலியில் அமர்ந்தான். நான் மேஜை அருகில் சாய்வு நாற்காலியில்.
’சொல்லு’
’நீங்க தவறா எடுத்துக்கிடக் கூடாது.’
‘நீ என்ன கேட்கப் போறேங்கிறது எனக்குத் தெரிஞ்சாத்தானே? நான் அதைத் தவறாக எடுத்துப்பேனா இல்லே, சரிதான்னு எடுத்துப்பேனாங்கிறதைச் சொல்ல முடியும்?’
‘சரி சொல்லிடறேன், சார்’
‘சொல்லு’
‘நான் கேட்கிறது என்னன்னா….?
‘உம்’
‘நீங்க காதலிச்சு கலியாணம் பண்ணிண்டவராமே?’
வாமனன் கேட்ட கேள்வியை மனதில் வாங்கு முன் நான் உட்காந்திருக்கும் அறை, கேள்வியைக் கேட்டுவிட்டு பதிலுக்காக ஆர்வமுடன் காத்திருக்கும் அந்த இளைஞன், மேஜை, நாற்காலிகளுடன் புரண்டு உயரப் போயிற்று. தலைக்கு மேல் சுற்றிக் கொண்டிருந்த மின் விசிறி டேபிள் ஃபேன் ஆகா பக்க வாட்டில் சுழன்றது. சாய்வு நாற்காலியை இறுகப் பற்றிக் கொண்டேன்.
‘ஏன் சார், அதிர்ச்சியா?’
‘இல்லே, பழைய ஞாபகங்களைக் கிளறி விட்டுவிட்டாய். அவ்வளவுதான் பேசு’
‘எதை சார்?’
‘அந்தக் கேள்வியை நீ கேட்கிற மாதிரிலே நான் பதில் சொல்லணும். இல்லையா?’
‘அதாவது சார். நீங்க காதல் பண்ணிக் கல்யணம் செய்துக்கிட்டவர் என்று கேள்விப்பட்டேன். உண்மையா?’
‘ஆமா. அது தெரிஞ்சு உனக்கு என்ன ஆகணும்.’
‘நானும் காதலிக்கிறேன்’
‘எனக்குத் தெரியும். உன் வீட்டுக்கு எதிர் வீட்டிலிருக்கிற அன்னத்தைத் தானே நீ காதலிக்கிறே?’
‘ஆமா சார்! உங்களுக்கு எப்படித் தெரியும்?’
‘எனக்கு மட்டும் என்ன, இந்தத் தெரு பூரா நீ அன்னத்தைக் காதலிக்கிறது தெரியுமே!’
‘அப்படியா சார்! நான் யாருக்குமே தெரியாதுன்னு நினைச்சிட்டுகிட்டு இருக்கேன்!’
‘பூனை கண்ணை மூடிட்டா பூலோகமே அஸ்தமிச்சிட்டுதுன்னு நினைக்குமாம்! நீ காதலிக்கிறது உன் தாயார், தகப்பனாரிலிருந்து எல்லாருக்குமே தெரியும்’.
‘இல்லே, சார்! என் தகப்பனாருக்கு இப்பத்தான் தெரியும். இன்னிக்கு காலையிலேதான் சொன்னேன். அதைக் கேட்டுத் திடுக்கிட்டு அப்பா தரைக்கும் கூரைக்கும் எம்பிக் குதிச்சார்’
‘வீட்டுக்குள்ளே இருந்திருப்பார். அதனால் தரைக்கும் கூரைக்கும் குதிச்சிருக்கார். வாசல்லே நின்னு இருந்தால் நிலத்துக்கும் வானத்துமா குதிச்சிருப்பார். பெற்றவங்களுக்கு இப்படி சர்க்கஸ் பண்ண இது ஒரு சான்ஸ்1 அவ்வளவுதான்!’
‘சார்! நீங்க காதலிச்சீங்களே, எப்படிக் கல்யாணம் பண்ணிண்டீங்க? உங்க தாயார், தகப்பனார் ஆட்சேபம் சொல்லலியா?’
‘இல்லே. மாறாக சந்தோஷப்பட்டாங்கோ’
‘அப்படியா, சார்? ஆச்சரியமா இருக்கே!’
‘என் அத்தை மகளை நான் காதலிச்சேன்’
‘ஓ!’
‘ஆமா அது மட்டுமில்லே. என் மனைவி இந்திரா ஒரு பி.ஏ.பி.டி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக இருந்தாள். சம்பாதிக்கிறவளைக் காதலிக்கிறேன் என்பதிலே அவங்களுக்கு மகிழ்ச்சி.’
‘உங்க மனைவியோட தாயார் தகப்பனார் எதிர்ப்பு எதுவும் சொல்லலியா?’
‘நீ என்னப்பா பத்திரிகை நிருபர் மாதிரி கேள்வி கேட்டுக்கிட்டே போறே?’
‘தவறா இருந்தா மன்னிச்சிடுங்க சார்! காதல்லே உங்களைப் பின்பற்றணும்னு எனக்கு ஆசை. அவ்வளவுதான்’
‘அவள் தாயார், தகப்பனாரும் ஆட்சேபிக்கல்லே. தங்கள் மகனையும் ஒருத்தன் காதலிக்கிறானே என்கிற ஆச்சரியம் அவுங்களுக்கு.’
‘ஏன் சார், அப்படி?’
‘நீ என் மனைவியைப் பார்த்திருக்கியோ?’
‘பார்த்திருக்கேன் சார்.’
‘அவள் பேசி நீ கேட்டிருக்கியோ?’
‘காதில் விழுந்திருக்கு சார்!’
‘அப்படியும் நான் அவளைக் காதலிச்சேன்’
‘ஏன் சார் அப்படி?’
‘காதல் இருக்கே…அது ஒரு மாயை. கண்ணை, காதை, அறிவை மறைசிடும்’
‘என் அன்னம் அப்படி இல்லே சார்! பார்வைக்குச் சித்திரம். கேட்பதற்கு அவள் குரல் தேன். பெயருக்கு ஏற்றபடி அவள் நடை, என்னை அப்படியே தன் அன்பாலே அபிஷேகம் பண்றான்னா பார்த்துக்கங்க சார்!’
‘தம்பி, உன் காதல் வெற்றி பெறுவதாக! டெவலெப்மெண்டை அப்பப்ப வந்து சொல்லு.’
‘வணக்கம்’ வாமனன் சென்றான்.
வாமனனின் வீடு எதிர்ச் சாரியில் நான்கு வீடு வலப்பக்கம் தள்ளி இருக்கிறது. அவன் எதிர்வீட்டு அன்னத்தைக் காதலித்து வருகிறான் என்பது எனக்குத் தெரியும். அன்னம் காதலிக்கத் தகுந்தவள். நான் இளைஞனாக இருந்து எனக்கு மணமாகாமலிருந்தால், நானே அவளைக் காதலித்திருப்பேன்.
வாமனன் தன் மோட்டார் சைக்கிளில் தெற்காகச் செல்வான். அன்னம் வடக்காக சற்று நேரத்துக்குப் பின் நடப்பாள். இருவரும் அடுத்த தெருவில் சந்திப்பார்கள். மோட்டார் சைகிள் என்ற அந்த வாகனம் அதன் பிறகு அவ்விரு காதலர்களையும் சுமந்து செல்லும். அவர்கள் இணையாகச் சினிமாவுக்குச் செல்வார்கள். ஓட்டலுக்குச் சென்று சேர்ந்து சிற்றுண்டி சாப்பிடுவார்கள். கடற்கரைக்குப் போய் ஒன்றாக மணலை விரலால் கிண்டிக் களைவார்கள்.
வாமனன் வந்துவிட்டுச் சென்ற மறுநாள் அவன் தந்தை வந்தார்.
‘ஓய்…உனக்கு அறிவு இருக்கா?’ என்று அறிவுக் கடையில் விற்கும் ஒரு பொருள் என்பது போலக் கேட்டார்.
‘ஏன் உங்களுக்குத் தேவையா?’
‘பின்னே என்னய்யா. என் மகனிடம் உன் காதல் வெற்றிப் பெறுக’ன்னு வாழ்த்தி அனுப்பிச்சீராமே!’
‘குரு – சிஷ்ய பாவம்’
‘அதாவது நீ குரு. அவன் சிஷ்யன். காதலிப்பது எப்படி என்பதை நீர் அவனுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறீர். அப்படித்தானே?’
’அப்படி இல்லை. சந்தேகம் வரும் இடங்களில் மட்டும் சந்தேகத்தை நிவர்த்திப்பதாக ஏற்பாடு. அவ்வளவுதான்.’
‘காதலிக்கிறது எதுக்கு?’
‘வேற எதுக்கு? கல்யாணம் பண்ணிக்கிறதுக்குத்தான்’
‘சாதி, சமயம், குலம், கோத்திரம், ஏழை,பணக்காரன்னு எதுக்கு இருக்கு?’
‘வேறே எதுக்கு? இப்படி காதலிக்கிறவங்களுக்குக் குறுக்கே வந்து நிற்கத்தான்’
’நீங்க இதுகளெல்லாம் பார்க்காமலா காதலிச்சீங்க?’
‘நான் எதையுமே பார்க்கல்ல. என் அத்தைப் பெண்ணை நான் காதலிச்சேன். கல்யாணம் பண்ணிண்டேன்.’
‘என் மகனுக்கு அத்தை இல்லை. அதனால் அத்தை மகள் இல்லை. ஆகையினாலே அவன் அத்தை மகளைக் காதலிக்க முடியாது. எங்க ஜாதியிலே எத்தனையோ பெண் இருக்காங்க. வேணும்ணா அவன்க்க ஜாதகத்தை எல்லாத்தையும் வாங்கிட்டு வரேன். எந்த ஜாதகம் பொருந்துதோ அந்த ஜாதகத்தை உரியவளை அவன் காதலிக்கட்டும். நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.
‘நல்ல யோசனைதான்’
‘அப்போ என் பையனை உங்க கிட்ட அனுப்பறேன். அவனுக்குப் புத்தி சொல்றீங்களா?’
‘புத்தி சொல்றதா?’
‘ஆமாம் தம்பி. ‘ஜாதிக்குள்ளாவே காதலி. அதுவும் ஜாதகப் பொருத்தம் பார்த்து காதலி. மேலும் ஆஸ்தி, அந்தஸ்து பார்த்துக் காதலி’ன்னு கொஞ்சம் அறிவு புகட்டி அவனை அனுப்புங்க. நான் வரட்டுமா?’
அடுத்த நாள் வாமனன் வந்தான். ‘என்ன சார்! எங்க அப்பாவிடம் நீங்க என்னைப் பார்க்கணும்னு சொல்லி அனுப்பிச்சீங்களாமே?’
‘ஆமா, உட்காரு. காப்பி சாப்பிடறயா?’
‘வேண்டாம், சார்!’
‘சும்மா சாப்பிட்டு வை, தம்பி!’ என்று அவனிடம் கூறிவிட்டு, வீட்டின் உள் பக்கம் திரும்பி, ‘இந்து……!’ என்று அழைத்தேன்.
மனைவி வந்து நின்றாள்.
‘ரெண்டு டம்பர்லே காப்பி கொண்டு வா.’
அவள் நெற்றியில் புருவங்கள் உயர்ந்தன. ‘காப்பியா?’ என்று கேட்டாள்.
‘ஆமா. காப்பிதான். காப்பிக் கொட்டையைப் பொன் நிறத்துக்கு வறுத்து, பொடி பண்ணி, நபருக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் வடிக்கட்டியில் போட்டி, கொதிநீர் ஊற்றி, வடி நீர் இறங்கியதும், அதனுடன் சூடான டிகிரி எருமைப் பால் கலந்து, தேவையான அளவு சர்க்கரை சேர்த்துப் பக்குவமாகப் பருகப்படும் பானம் இருக்கிறதே, அந்தப் பானத்தில் இரு டம்ப்ளர் கொண்டு வா.’
‘ஓ, அதைச் சொல்றீங்களா? காப்பிக் கொண்ட்டை என்று ஏதோ ஒன்று சொன்னீங்களே. அது எங்கே இருக்கு?’
தலையைக் குனிந்து கொண்டேன்.
‘பால்னு ஏதோ ஒண்ணைச் சொன்னீங்களே, அது நிறுத்து வாங்கப்படுவதா அல்லது மீட்டர்கோல் கொண்டு அளந்து பெற வேண்டியதா?’
நான் நிமிரவில்லை.
‘சர்க்கரை என்னும் பொருள் உப்பைப் போலக் கரிக்குமா, அல்லது படிக்காரத்தைப் போல துவர்க்குமா?’
‘அப்போ காப்பி கிடையாதுன்னு சொல்றயா, இந்து?’
‘நீங்க கொண்டு வந்து கொட்ற சம்பாத்தியத்துக்குப் பகல் பன்னெண்டு மணிக்குக் காப்பிதான் குறைச்சலாப் போச்சாக்கும்! உங்களைக் கல்யாணம் பண்ணிண்டு நான் என்ன சொகத்தைக் கண்டேன்? பி.ஏ.பி.டி படிச்சு என்ன உபயோகம்? இருந்த வேலையையும் விடச் சொல்லியாச்சு. இப்போ நினைச்ச நேரத்துலே காப்பி வேணும்னா ஒருத்தி எங்கே போவேன்? மனுஷன்னா தனக்காகத் தெரியணும். இல்லே, நிலைமையைக் கேட்டுத் தெரிஞ்சுக்கணும். ரெண்டுமில்லாம இருந்தா, குடும்பம் நடத்தறவள் என்னாலே என்ன பண்ண முடியும்? மூன்றாம் மனிதன் ஒருவன் எதிரில் உட்கார்ந்திருக்கிறானே என்பது தெரியாமல் அவள் பேசிக் கொண்டு போனாள்.
‘நான் வரேன் சார்! வந்த நேரம் சரியில்லை’ என்று கூறி எழுந்தான் வாமனன்.
‘நீ வந்த நேரம் சரிதான்!’ என்றேன். அவன் எதிர்கால வாழ்க்கையில் எனக்கு அக்கறை இருந்தது.
வாமனன் சென்றான். அதன் பிறகு அவன் என்னைப் பார்க்க வரவில்லை. அவன் தந்தையும் வரவில்லை. நானும் எவ்வித நன்றியும் எவரிடத்தில் இருந்தும் எதிர்ப்பார்க்கவில்லை.
சிறிது நாட்களில் வாமனனுக்குத் திருமணம் நடந்தது.
வாமனன் யாரோ ஒருத்தியைக் கைப்பிடித்தான்; அன்னம் எவனோ ஒருத்தனைக் கைப்பிடித்தாள்; வேறு வேறு தேதிகளில்!
நன்றி ;தினமணி கதை பகுதி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
