உஷாவுக்கும் பிரபுவுக்கும் நடுவே ஒரு நாணா - பியார்
டேய் நாணா… என் ரூமில் இருக்கிறதே காட்ரெஜ், அதிலிருந்து ப்ளூ கலர் சர்ட்டையும் எடுத்துக் கொண்டு வாடா!’ பனியன் லுங்கி சகிதம், வெளி வராந்தாவில் ஜன்னலின் மேல் ஸ்கொயர் மிர்ரரைச் சாய்த்து, நெளிந்து வளைந்து எழுந்திருந்து உட்கார்ந்து தலை வாரிக் கொண்டே கட்டளையிட்டான் பிரபு.
அவன் தினமும் எதற்காக இப்படி வெளி வராந்தா ஜன்னல் அருகே வந்து தலையை வாரிக் கொள்ள வேண்டும்? பவுடரைப் பூசிக் கொள்ள வேண்டும்? டிரஸ் (ஸைப்) பண்ணிக் கொள்ள வேண்டும்?
ஜன்னல் வழியே பார்த்தால் தெரு தெரியும். தெருவில் எதிர்த்த வீடு தெரியும். எதிர்த்த வீட்டில் அவள், அவனுடைய ‘இவள்’ பெயர் உஷா; எப்போது ஆபிசுக்குப் புறப்படுகிறாள் என்று தெரியும். அவள் இறங்கித் தெருவில் நடந்ததும், அவனும் தன் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு அவளை உரசிக் கொண்டு போவான். அவள் பஸ் ஸ்டாண்டில் நிற்கிற போது, அவளைப்பார்த்து ஸ்மைல் பண்ணுவான். அவள் அண்ணா சாலையில் பஸ்ஸில் இறங்கியதும் அங்கேயும் தயாராய் இருப்பான் ஸ்கூட்டரோடு, ஸ்மைலோடு.
கடைசியில் அவள் நுழைகிற சந்து எல்லாம் போய், அவள் ஆபிசுக்கு அவள் போன பிற்பாடு தன் ஆபிசுக்குப் போவான் பிரபு.
‘என்னடா யோசனை? பாண்ட் ஷர்ட் நீட்டிக் கொண்டிருக்கிறது கூடத் தெரியாமல்? ஜன்னல் வழியே பிரபுவின் பார்வை ஒருமித்து சென்றதை, யோசனை என்று எண்ணிக் கேட்டான் நாணா.
‘ம்….ஒன்றுமில்லை. கொண்டா! பிரபாவின் தலை வழியாக லுங்கி வெளியேறியது.
நாணா அதைக் கையால் வாங்கிக் கொண்டான்.
நாணா இடுப்பில் நாலு முழம். குடுமித் தலை. இரண்டு நீண்ட காதுகள். இரண்டு ஒளிமிக்க கடுக்கன்கள். மேல் உடம்பு நேக்கட்.
‘நாணா ஒரு சின்ன ஹெல்ப்!’
‘சொல்லேண்டா!’
‘என் ஸ்கூட்டரை வாசலில் இறக்கி நிறுத்தேன்’
‘ஸ்கூட்டர் உனக்காக வாசலில் காத்திண்டிருக்கு’ என்றார் நாணா பிரபுவிடம் வந்து.
‘ஸ்கூட்டர்தானேடா….’ என்று முனகியவாறே புறப்பட்டான் பிரபு.
பிரபுவுக்குத் துணுக்கென்றது. கைக் கடிகாரத்தைப் பார்த்ததும். உஷா இந்நேரம் புறப்பட்டிருக்கும் நேரம் ஆகிவிட்டது. இன்னும் அவள் வெளியே வரவில்லை. உடம்பு சரி இல்லையா?
நாணா அன்று மத்தியானம் அபூர்வமாய், பழைமைக்கு ஓர் எடுத்துக்காட்டான அவனுடைய சட்டையைப் போட்டுக் கொண்டு (போன தீபாவளிக்கு அப்பா எடுத்துக் கொடுத்தது அது.) வேட்டியும், சுமாரானதாய்க் கட்டிக் கொண்டு பர்சனாலிடியோடு வாசலுக்கு வந்து, வீட்டுக் கதவைப் பூட்டினான்.
பிரபு ஆபிசிலிருந்து வர மணி ஐந்தரை ஆகும். அதற்குள் மாட்னி ஷோ ஒன்றுக்குப் போய்விட்டு வந்துவிடலாம் என்பது நாணாவின் அன்றையத் திட்டம்.
அதே சமயம் பிரபு காலையில் தேடு தேடு என்று கண்களால் தேடிய உஷா மூன்று தோழிகள் உடன் வர எதிர் வீட்டிலிருந்து வெளிப்பட்டாள். அவர்கள் வெளியே நின்றுகொண்டிருந்த நாணாவைப் பார்த்ததும், ‘களுக்’ ‘களுக்’கென்றனர். நாணாவை வெட்கம் பிடுங்கித் தின்றது.
நாணாவுக்கு சட்டெனத் தோன்றியது மனதில் ஒன்று. அவன் அன்று போக இருந்த படம் ‘பக்த மார்கண்டேயா’ பழசுதான். ஒரு வாரம் மட்டும் அந்தத் தியேட்டர் எங்கே என்று தெரியவில்லை. இவர்களை கேட்டால் என்ன?’
‘பக்த மார்க்கண்டேயா’ படம் ஓடுகிற சினிமாக் கொட்டகை எங்கே இருக்கு?’ அவர்களை நெருங்கிக் கேட்டான் நாணா.
உஷா உட்பட அங்கே இருந்த அனைவர் முகமும் என்னவோ மாதிரி மாறியது. ‘நாம் பார்க்காத படம் என்று ஒன்று இல்லவே இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கையில், அப்படி ஒன்றைச் சுட்டிக் காட்டிவிட்டதே இது!’
‘பக்த……’ லீலு
‘மார்க்கண்டேயா….’ ஜயந்தி
‘பழைய மாம்பலம்…’ – உஷா.
‘நாம் இன்றைக்கு லூவு போட்டது வீணாகாமல் நம் புரோகிராம் அங்கே வைத்துக் கொள்வோமா?’’ – மாலு.
‘குட் ஐடியா..’
‘ஐயா டிவெண்டி ஸிக்ஸ் நாங்களும் அந்தப் படத்திற்குத்தான் போகிறோம். வருகிறீர்களா? என்று கேட்டாள் லீலு.
‘ஓ….பேஷாய்….’ நாணாவின் முத்துப் பற்கள்தான் என்ன அழகு.
‘சரியான ட்வெண்டி ஸிக்ஸ் தான்’ என்றாள் மெதுவாய் பதிலுக்கு லீலு.
‘எங்கே போத் தொலைந்தான் வீட்டைப் பூட்டிக் கொண்டு இந்த நாணா. பட்டிணத்தில் இடம் தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கிறானோ ஒரு வேளை! கால் மணியாய் வீட்டு வாசலிலே நின்றுகொண்டு தவித்தான் பிரபு.
அவனுடைய தவிப்புக்கு பதில் சொல்கிறார் போல ஆட்டோ ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து உஷாவும் நாணாவும் இறங்கினார்கள். பிரபுவுக்கு ஒன்றும் புரியவில்லை! இவன் எப்படி இவளோடு? அவன் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே மீட்டருக்கான பணத்தைத் தந்து விட்டு ஆட்டோவை அனுப்பினாள் உஷா.. ‘நான் வருகிறேன்!’ என்று தன் வீட்டுப் படியில் ஏறிய உஷாவிடம், ‘ஓ, பேஷாய்!’ என்றான் நாணா. பெரிய ஹாஸ்யத்தைக் கேட்டுவிட்ட மாதிரி நகைத்தாள் உஷா. அவள் தன் வீட்டுக்குள் நுழைந்தாள். நாணா திரும்பினான். சிலையாய் நின்று கொண்டிருந்தான் பிரபு.
‘அடேய் பழி, நண்பணுக்கே நீ இப்படித் துரோகம் பண்ணலாமா? உனக்கு ஆதரவு தந்த எனக்கே நீ இப்படி எதிரியாக மாறலாமா? என்றான் நாணாவைப் பார்த்துப் பிரபு.
‘நீ என்னடா சொல்றே?’ ஒன்றும் புரியாமல் கேட்டான் நாணா.
முதலில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வா. வயிறு எரிகிறதடா எனக்கு. காத்திருந்தவன் பெண்டாட்டியை இன்றூ வந்தவன் கொண்டு போய்விட்டான்’. பிரபுவுக்கு உளறல்; உதறல்.
‘யார் அந்தப் பாவி?’
‘நாணா!’
‘நானா? என்னடா சொல்றே?’
‘டேய், உன் நெஞ்சில் கையை வைத்துச் சொல். எதிர் வீட்டை நான் ஃபாலோ பண்ணுவது உனக்குத் தெரியுமில்லையா?’ என்றான் பிரபு படபடப்பாக.
‘ஆமாம் அவள் மேல் நீ ஆசைப்பட்டுண்டிருக்காய்’.
‘நாகரிகமாய்ப் பேசேன். நான் அவளைக் காதலிக்கிறேன்’
‘அதற்கு என்ன இப்போ?’
‘என்னடா அவளுடன் சேர்ந்து வந்து ஆட்டோவில் இறங்கிவிட்டு அதற்கு என்ன என்கிறாய்? இது உனக்கே நன்றாய் இருக்கிறதா?’
அட்டகாசமாகச் சிரித்தான் நாணா.
‘என்னடா சிரிப்பு?’
‘பின்னே சிரிக்காமல் என்ன பண்ணுகிறது? மத்தியானம் போரடிக்கிறது என்று சினிமாவுக்குப் புறப்பட்டேன். ‘பக்த மார்கண்டேயா’ படம் ஓடுகிற தியேட்டர் தெரியவில்லை. அந்த உஷாவிடம் அந்தத் தியேட்டர் இருக்கிற இடத்தைக் கேட்டேன். அவளும் அவள் சிநேகிதிகளோடு அந்தப் படத்திற்குத்தான் புறப்பட்டுண்டிருந்தாள் போலிருக்கு. என்னையும் அழைச்சிண்டு போனாள். இதைத் தப்பாய் எடுத்துண்டுட்டாயே நீ?’ என்று நாணா விளக்கினான்.
‘நிஜமாய் அவள் சிநேகிதிகளோடு தானே உன்னை அழைத்துக் கொண்டு போனாள்?’
‘ஆமாம்’
‘தனியாய் இல்லையே?’
‘இல்லை’
‘அப்பாடா! என் வயிற்றில் பாலை வார்த்தாயடா நாணா!’ என்று அவனைக் கட்டிக் கொண்டான் பிரபு.
‘டேய் நாணா, நீ ஒரு விதத்தில் கொடுத்து வைத்தவந்தானடா!’
‘எப்படி?’
‘நானும் இத்தனை நாளாய் முயற்சி பண்ணி அவளிடம் ஒரு இதழ் அசைவைக் கூடக் காணவில்லை. நீ அவளோடு சினிமாவுக்கே போய் வந்து விட்டாய்! இது உன் அதிர்ஷ்டம்டா!’
‘அவள் என்னைப் பற்றி உன்னிடம் எதாவது கேட்டாளா?’ பிரபு
‘கேட்டாள்!’
‘என்ன, என்ன….கேட்டாள்?’
‘உங்கள் நண்பர் டிராபிக் இன்ஸ்பெக்டரா?’ன்னு கேட்டாள்.
பிரபு புருவத்தை உயர்த்தினான்.
‘உன்னை ரோட்லே பாக்கிறாளாம்.
‘ஸில்லி கேர்ல்!’ பெருமூச்செறிந்தான் பிரபு.
அதற்குப் பிறகு உஷாவுக்கும் நாணாவுக்கும் நல்ல பழக்கம். உஷாவின் வீட்டுக்கே உரிமையோடு போய்வர ஆரம்பித்துவிட்டான். உஷாவின் அப்பாவும் நாணாவைப் போல்தான் இருப்பார். அதே உருவம். அதே சுபாவங்கள். இரண்டு பேருக்குமுள்ள வித்தியாசம் வயது ஒன்றுதான். டைட்ஸ்களையும் ஹிப்பிகளையும் வாலிப ரூபத்தில் பார்த்து அலுத்துப் போன உஷாவின் அப்பாவுக்கு நாணாவைப் பார்க்கிறபோது நிறைவாய் இருந்தது.
நாணா, பிரபுவுக்கு உபயோகமாய் இருக்கிற மாதிரி உஷாவின் வீட்டுக்கும் உபயோகமாய் இருந்தான். கடையில் ரேஷன் வாங்கிக் கொடுப்பது, காய்கறி வாங்கி வருவது உஷாவின் அப்பாவுக்கு மூக்குப் பொடி வாங்கித் தருவது இப்படி எல்லாம்.
நாணாவின் இந்த அதிதீவிர வளர்ச்சியைப் பார்த்து பிரபுவின் மனதில் தோன்றியது ஒரு யோசனை. தன் காதலை நாணா மூலம்தான் ஈடேற்ற வேண்டும் என்று முடிவு செய்து அன்றே நாணாவிடம் வெளியிட்டான் தன் எண்ணத்தை.
‘நாணா அந்த உஷா எனக்குக் கிடைக்க வேண்டும் என்றால் நீதான் மனசு வைக்க வேண்டும்’
‘எப்படி?’
‘நான் அவளுக்குக் கடிதம் எழுதித் தருகிறேன். அதைக் கொடுத்து அவள் நினைவாகவே உருகுவதை எடுத்துச் சொல்லேன்’.
‘ஐயோ, ஆபத்தான காரியமாய்ச் சொல்றையே!’ என்று நாணா பயந்தான்.
‘இதிலென்னடா ஆபத்து?’ என்று கேட்டான் பிரபு.
‘அவள் அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிந்தா என்னைப் பத்தி என்ன நினைப்பார்?’
‘தெரிந்தால்தானேடா, என் உஷா அவள் அப்பாவிடம் இந்தக் கடிதாசியைக் கொடுக்க மாட்டாள்’
‘பின்னே?’
‘தன் ஜாக்கெட்டுக்குள் நெஞ்சில் வைத்துக் கொள்வாள். பத்திரமாக இதை. பிறகு இதற்குப் பதில் எழுதி உன்னிடம் தருவாள். அதை நீ வாங்கிக் கொண்டு வந்து என்னிடம் தருவாய்’ ரொம்பவும் நம்பிக்கையாய்ச் சொன்னான் பிரபு.
பின் பிரபு தன் உள்ளத்து உணர்ச்சி மயமான காதலை ஐந்தாறு முழு பக்கப் பேப்பரில் எழுதி நாணாவிடம் தந்தான். நாணா உஷாவிடம் கொண்டு போய்க் கொடுத்தான். உஷா அதைப் படித்துவிட்டு ஜாக்கெட்டுக்குள் நெஞ்சில் வைத்துக் கொள்ளவில்லை. நாலாய்க் கிழித்து கடிதத்தைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு அதை ஒரு பொருட்டாய் எடுத்துக் கொள்ளாமல் இருந்தாள். காதல் மன்னன் பிரபு அயரவில்லை. எழுதினான். எழுதினான். மீண்டும் நாலைந்து கடிதங்கள். அவை வழக்கம் போல் நாணா மூலமாக உஷாவிடம் போய்ப் பின் குப்பைத் தொட்டில் தன் ஆயுசை முடித்துக் கொண்டன.
கடைசியாக ஒரு கடிதம் எழுதினான் பிரபு.
அன்புள்ள உஷா,
என்னைச் சோதித்தது போது. இனியாவது என் உண்மைக் காதலை நம்பு. இன்னமும் நான் உன்னை மனதார நேசிக்கிறேன்.
அன்று தன் அறையில் உட்கார்ந்து சிகரெட் புகை வளையங்களை எண்ணிக் கொண்டிருந்தான் பிரபு.
‘சார்!’
‘உஷா….நீயா? கம் ஆன். டேக் யுவர் சீட்!’ ஸோபா-கம் பெட்டைக் காட்டினான் பிரபு.
அவள், ‘தேங்யூ’ என்றவாறே அமர்ந்து கேட்டாள் : ‘நாணா இல்லை?’
‘இல்லை; அவன் தன் உத்தியோக விஷயமாய் ஒருவரைப் பார்க்கப் போயிருக்கிறான். என்றான் பிரபு
‘நாணா கொடுத்த கடிதங்களை எல்லாம் படித்தேன். நன்றாய்த் தான் எழுதியிருக்கிறீர்கள்!’ என்று பேச்சை ஆரம்பித்தாள் உஷா.
‘ஓ…நீ ஏன் உஷா எழுதவில்லை?’ என்றான் பிரபு.
’பதில் என்ன எழுதுவது என்று தெரியவில்லை. பதிலைச் சொல்லத்தான் நேரிலேயே வந்துவிட்டேனே?’ அவனைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தாள் உஷா. அவன் கிளுகிளுத்துப் போனான்!
‘உஷா! நீ என்னை இத்தனை நாளும் ஒரு வாட்டு வாட்டி விட்டாய். எத்தனை தரம் உன் பின்னாலேயே வந்திருப்பேன்; ஒரு ரெஸ்பான்ஸ் உண்டா உன்னிடம் இருந்து!’ தன் பழைய கதையைச் சொன்னான் பிரபு.
‘உங்கள் காதலின் ஆழத்தைத் தெரிந்து கொள்ளத்தான் அப்படி. நீங்கள் ஏன் நின்று கொண்டிருக்கிறீர்கள்? உட்காருங்கள்!’ என்றாள் தன் அருகே சுட்டிக் காட்டி உஷா.
பிரபு அவள் அருகே உட்கார்ந்து கொண்டான். இருவர் கைகளும் இணைந்தன.
‘உன் கை ரொம்பவும் மிருது!’
‘உம்’
‘இந்தக் கரத்தை நாலு பேருக்கு முன்னால் நான் என்றைக்குப் பற்றுவது?’
‘என் அப்பாவைக் கேளுங்கள்.’
பிரபு பின் ஒன்றும் பேசவில்லை. வாய்ச் சொற்கள் பயனில்லாத நேரம் அது.
‘உஷா, உஷா!’ முனகல் பெரிதாகியது பிரபுவிடமிருந்து.
‘டேய்….டேய் பிரபு! எழுந்திருடா, மணி ஆறாகப் போகிறது. சாயங்கால நேரத்திலே தூங்கக் கூடாது. எழுந்திரு! நாணா தலையணையை அணைத்துக் கொண்டு கிடந்த பிரபுவை எழுப்பினான். பிரபு எழுந்து கண்களைக் கசக்கிக் கொண்டான். பிரபு எழுந்து கண்களைக் கசக்கிக் கொண்டான். வெறுமை இழையோடிற்று. அவனுக்கு நாணாவைப் பார்த்ததும்.
கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான் பிரபு. அன்று மாலை, நாணா ஓடோடி வந்தான் அவனிடம்.
‘பிரபு, உனக்கு ஒரு சந்தோஷ சமாச்சாரம்’
‘என்னடா?’
‘உஷா உன்னுடைய கடுதாசிக்கு பதில் எழுதிக் கொடுத்திருக்கா’ கவர் ஒன்றை நீட்டினான் நாணா.
தன் கையைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டான் பிரபு. அன்று மாதிரி ட்ரீம் இல்லை இது. கவரை வாங்கிப் பிரித்தான்.
‘அன்புள்ள நண்பரே,
வணக்கம். உங்களுடைய கடிதங்கள் நாணா மூலம் கிடைக்கப் பெற்றேன். கடைசியாக நீங்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் ‘என்னைச் சோதிக்காதே’ என்று எழுதியிருந்தீர்கள். உங்களை சோதிக்கக் கூடாது என்று தான் இந்தப் பதிலை எழுதுகிறேன்.
நீங்கள் என்னை உயிருக்குயிராய்க் காதலிப்பதாகக் கூறியிருந்தீர்கள் முன் கடிதங்களில். உங்கள் காதலை நான் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன். நீங்கள் என்னை விரும்பின மாதிரி உங்களை என்னால் விரும்ப முடியவில்லை. அந்த மாதிரி வேறு ஒருவரை விரும்புகிறேன் நான். அவர்தான் நாணா.
ஆச்சரியப்பட வேண்டாம்! அவருடைய வெள்ளை உள்ளமும் உழைக்கும் தன்மையும், நேர்மைத் திறனும் எனக்கு மட்டுமல்ல, என் அப்பாவுக்கும் மிகவும் பிடித்திருக்கிறது. அவர் மாதிரி ஒருவர் எனக்குக் கணவராய் வரவேண்டும் என்று தான் ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன் நான். என் அப்பா, அவருக்கு ஒரு நல்ல வேலையும் வாங்கிக் கொடுத்து கல்யாணம் பண்ணி வைத்துவிடுகிறேன் உனக்கு! என்று சொல்லிவிட்டார். நாணாவுடைய சம்மதம் தான் பாக்கி இனி.
உங்கள் வீட்டுக்கு வந்ததால்தான் நாணா எங்களுக்குப் பழக்கம் என்ற வகையில் மிக்க நன்றி உங்களுக்கு.
இப்படிக்கு
உஷா’
‘டேய் நாணா! இந்தக் கடிதத்தைப் படிடா….! வீறிட்டான் பிரபு.
மறுநாள். இரவு வெகு நேரம் வரை நாணாவைக் காணவில்லை. உஷா வீட்டில் கேட்டான் பிரபு. அவன் அங்கு இருப்பானோ என்று. உஷாவின் தந்தை ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து தந்தார் அவனிடம்.
மங்கிய ஒளியில் நாணாவின் எழுத்துக்கள் முத்து முத்தாய்ப் பிரகாசித்தன.
‘உஷாவுக்கு நாணா எழுதிக் கொண்டது….பிரபுவுக்கு நீ எழுதிய கடிதம் கண்டேன். திகைப்பாய் இருந்தது.
நீ என்னை விரும்பலாம். நானும் உன்னை ஏற்றுக் கொள்ளலாம். பிரபு உன்னைக் காதலிக்காமல் இருந்தால்! அவன் உன் மேல் கொள்ளை அன்பு வைத்திருக்கிறான். அவனை நீ புறக்கணிக்காதே. அவன் என்னை ஆதரித்து, இருக்க இடம் கொடுத்து, அத்தனை வாஞ்சையாய் என் மேல் இருந்ததற்கு நான் செய்கிற கைமாறு அவன் விரும்பியவளை நான் அடைவதாக இருக்கக் கூடாது. உன்னை அடைகிற தகுதி, அந்தஸ்து, அழகு எல்லாம் பிரபுவுக்குத் தான் உண்டு. அதற்குக் குறுக்கே நான் நிற்கக் கூடாது என்று தான் கிளம்பிவிட்டேன்.
உன் அப்பாவுக்கு என் நமஸ்காரம்
நாணா’
பிரபுவின் கண்கள் வாழ்நாளிலேயே முதன் முறையாகக் கலங்கின.