வண்ணத்துப்பூச்சி விளைவு
மூளைப் பள்ளங்களில்
குடுவையில் விதைத்த
சில பாக்டீரியாக்கள்
சறுக்கி விளையாடி
சத்தம் போட்டன !
அச்சத்தம் மீறிய
பெரும் சத்தத்தை
கடக்கப் போகும்
வேகத்தடை கண்ட
என் மிதிவண்டிச்
சக்கரத் தடைகைள்
சட்டெனத் தெளித்தன !
செந்நாரையின் - அலகு
தீண்டிய ஒருதுளி
நீர் - நீராவியாகி
மேகத்துள் நுழைந்து
மறுபடி குதிக்க
தயாராகி - றெக்கை
அணிந்து கொண்டிருந்தது !
என் குளிர்விப்பான்
குடித்த மின்சாரம்
கருவாக காரணமான
நிலக்கரி சிதைந்ததால்
பிறந்த - தூசியோன்று
தாழ்வாக பறந்தது
அமர இடம்தேடி !
பக்கத்துக்கு மரம்
வீசிய தென்றலின்
நீட்சியை - தன் பச்சை
விரல்களால் விசிறியடித்த
மரமொன்றின் கிளைகள்
அழ்ந்த சுவாசமொன்றுக்கு
அடுத்ததாய் தயாராயின !
வீசிய காற்றில்
காசின்றி பயணித்த தூசி
என் விழியேறி அமரவும்,
மழைகுட்டியோன்று
என் விழி தேடி விழவும்,
வேகத்தடை கண்ட
சக்கரம் சட்டெனத்
எகிறிக் குதிக்கவும்,
நீர்த்துளி விழுந்த
அதிர்ச்சியில் - தூசி
விழிதாண்டி குதிக்கவும்,
என் எண்ணத்தில்
சறுக்கி விளையாடிய
பாக்டீரியாக்கள்
திகைத்து உறையவும்
ஒரேயொரு நொடியே
போதுமானதாயிருந்தது !
- வினோதன்