எதை தேடி பயணிக்கிறேன்

நேரம் மௌனமாய் கடக்கிறது
கவிதை மட்டும் தோன்றவில்லை
யோசிக்கிறேன்
தவிக்கிறேன்
துடிக்கிறேன்

கடிகார சத்தம் காதில் இடி போல் இடிக்கிறது
காற்று வேகமாக வீசி எனை சாய்க்கிறது
குயில் கூவுவதை ரசிக்கவில்லை
தேன் பலா ருசிக்கவில்லை
இன்று
மழை ஓய்ந்து கிளப்பும் மண் வாசம் லயிக்க மனம் என்னிடம் இல்லை இன்று
இரவு ஓடையில்
நிலவு ஓடத்தில்
பயணிக்க நேரமில்லை இன்று
கடற்கரை மணலில்
ஊதகாத்தில் தூங்க மனம் செல்லவில்லை
மலையேறி
குடில் போட்டு
காடுமலையில் கிடக்க
ஏனோ இன்று முடியவில்லை
கரையான் புற்றுபோல் மண்டிகிடக்கிறேன்
ஓர் அறைக்குள்
வெளியில் இருந்து வரும் காலை சூரியனையும் தென்றலையும் பார்க்க
இதயம் இடங்கொடுக்கவில்லை
என் தோட்டத்து புல் நுனி பனி துளி ஏனோ இன்று
என் காலை சிலிர்க்கவில்லை
ஜன்னலும் நானுமாய் கடற்கரையோடு தேநீர் அருந்தவில்லை
தேதி தாளை கிழிக்கவும் கை செல்லவில்லை
மனம் மட்டும் நேற்றிலேயே இருக்கிறது
வாசல் கோலம் சிக்காய் தெரிகிறது
புல்லாங்குழல் இசை அலறலாய் கேட்கிறது
பூங்கொத்துகளில் வாசம் இல்லை
வாயில் முற்றத்தின் இலைகளின் வருடல் எரிச்சலை தருகிறது
என்னவர் உடன் இருந்தும்
நான் மட்டும் ஓர் உலகில் திரிகிறேன்
எழுத நினைத்த
கவிதையும் தோன்றவில்லை

இயற்கை கவிதையை எழுத எண்ணி
நான் செயற்கை இயந்திரமாய் மாறி நிற்கிறேன்

நான் பார்த்த யாவும்
கவிதை என்பதை
எண்ணாமல்
இருக்கும் இடமெல்லாம்
விட்டுவிட்டு
எங்கேயோ செல்கின்றேன்
ஓர் சாதாரண மனிதனாய்

~ பிரபாவதி வீரமுத்து


படம் :
செஞ்சி, மேல்மலையனூர் பகுதிகளில் உள்ள வராக நதி மற்றும் தொண்டூரில் அமைந்துள்ள தொண்டி ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் என் ஊர் (செண்டூர்) வழியாக வீடூர் அணையில்
சென்று கலக்கும்.
படத்தில் உள்ள இடம் : செண்டூர்

~ பிரபாவதி வீரமுத்து
செண்டூர்
திண்டிவனம்

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (29-May-16, 7:10 am)
பார்வை : 261

மேலே