போலிகளைப் பார்த்து ஏமாறுகின்றோம்
ஐபிஎல் கிரிக்கெட் பார்க்க அலை மோதும் ரசிகர்கூட்டம். வீடுகள் தோறும் தொலைக்காட்சிப் பெட்டியில் வீரர்கள் அடிக்கும் பவுண்டிரிகளையும், சிக்சர்களையும் ரசித்து கைதட்டி மகிழும் ரசிகர் கூட்டம்.
சினிமா உலகில் கொடிகட்டிப்பறக்கும் நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள். புதுப்படம் வெளிவரும் அன்று நடிகர்களுக்கு வைக்கப்படும் வானுயர்ந்த கட் அவுட்டுகள். அதில் பாலபிசேகம் செய்து மகிழும் ரசிகர்கூட்டம்.
என் மனதுக்குள் ஒரு நெருடல். அதை என் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். உண்மையான ஹீரோவுக்கு பின்னால் எந்த ரசிகர்கூட்டமும் இல்லையே என்பதுதான் என் நெருடல். நான் குறிப்பிடுகின்ற அந்த உண்மையான ஹீரோ யார் தெரியுமா?
பாகிஸ்தான் எல்லையிலும், சீன தேசத்து எல்லையிலும் துப்பாக்கியுடன் நிற்கின்றானே இந்திய இராணுவ வீரன், அவனைத்தான் குறிப்பிடுகின்றேன். நாம் அமைதியாக வாழ, எல்லையிலே தன் உயிரை துச்சமென மதித்து நமக்காக போராடுகின்றான் அந்த வீரன். அவன் தான் உண்மையான ஹீரோ. தன் மனைவி மக்களை பிரிந்து பனியிலும், மழையிலும், வெயிலிலும் தன் சுகங்களை மறந்து போர்க்களத்தில் நிற்கும் அந்த வீரனுக்கு நாம் என்ன மரியாதை கொடுக்கின்றோம்.
கிரிக்கெட் வீரர்கள் சிக்சர்களை அடித்து, விக்கெட்டுகளை வீழ்த்தி லட்சங்களை குவிக்கின்றார்கள். நடிகர்கள் ஒரு சில படங்களிலேயே கோடிகளை சம்பாதிக்கின்றார்கள். ஆனால் எல்லையில் போராடும் வீரனுக்கு சில ஆயிரம் தான் சம்பளம். அவனுக்கென்று ரசிகர் கூட்டம் கிடையாது. அவனிடம் ஆட்டோ கிராபில் கையெழுத்து வாங்க எவரும் இல்லை. அவனுக்கு துறை சார்ந்த பட்டங்கள் தவிர வேறு பட்டங்கள் கிடைக்காது.
அரசியல் வாதிகளுக்கும், நடிகர்களுக்கும் நம் சமுதாயம் அளிக்கும் பட்டங்கள் பல. புகழாரமோ வானளாவியது. ஆனால் மௌனமாக பல சாதனைகளை செய்து தன் உயிரையே தியாகம் செய்யும் இராணுவ வீரனுக்கு சமுதாயவிழாக்களில் இரங்கல் கூட சொல்வதுகிடையாது.
நடிகனுக்கும், கிரிக்கெட் வீரனுக்கும் பிறந்த நாள் கொண்டாட ரசிகர் கூட்டம் இருக்கின்றது. ஆனால் நாட்டுக்காக உயிர் துறந்த இந்த வீரனின் இறுதி ஊர்வலத்தில் சில நட்புகள், உறவுகள்…….. மட்டும்தான்…. பத்திரிக்கைகளும் ஊடகங்களும் கூட சினிமாக்காரர்களின் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் அளவுக்கு இந்த வீரர்களுக்கு முக்கியத்தவம் கொடுப்பதில்லை.
உண்மைகளை உதாசீனம் செய்கின்றோம்!
போலிகளைப் பார்த்து ஏமாறுகின்றோம்!