நான் செத்த கதை கேளுங்கள் - வினோதன்
சிறையில் பிறந்த
சிறையில் வளர்ந்து
சிறையில் இறந்த
அப்பாவி கொரில்லாவின்
மரண வாக்குமூலம் !
ஹரம்பி என் பெயர்,
சேர்ந்து இழுப்போம்
என்பது பொருள் - ஆம்
சேர்ந்து தான் இழுத்தீர்கள்
என்னுயிரின் வேரை !
பதின்ம வயதாம் பதினேழில்
இன விருத்திக்காக
வேரோடு பிடுங்கி
வேறிடம் நட்டீர்கள்,
பெண்டிர் இரண்டோடு !
நீங்கள் அளித்த உணவை
விரும்பியோ விரும்பாமலோ
சேர்ந்தே தின்று செரித்தோம்,
மிருகக் காட்சி சாலையெனும்
றெக்கையழிப்பு சிறைகளில் !
நீங்கள் விரும்பிய
உணவளித்து - குளிப்பாட்டி
உங்களை - ஒரு கூட்டில்
சுதந்திரமாக அடைத்தால்
உயிர் வாழ் இயலுமா
சொல்லுங்கள் ஆறறிவிகளே !
அதுவும் கிடக்கட்டும் - செத்த
நான் செத்த கதை கேளுங்கள்...!
என் திறந்தவெளிக் கூட்டின்
பதினைந்தடி ஆழத்தில்
வந்து விழுந்தான்
ஒரு பிஞ்சு மனிதன் !
மேலே ஒரு கூட்டம்
விலங்காம் எனக்கு விளங்கா
மொழியொன்றில் கூவினர் !
அவர்களுக்கு பயந்து தான்
ஐந்தறிவே தேவலாமென
விழுந்தான் அச்சிறுவன்
என்றெண்ணி காத்தேன் !
சைவ பட்சியான நான்
உண்டு விடவா போகிறேன் ?
என் மொரட்டு கைகளால்
சிராய்ப்புகள் உண்டாகலாம்,
காப்பதே - என் நோக்கமென
கத்தியுரைக்க மொழிக்கெங்கே போக ?
ஒரு ஆணின் தாய்மை
தூண்டினான் அச்சிறுவன் !
உயிர் கொடுத்தாவது
காக்க எண்ணிய - என்
உயிர் கொடுத்துதான் காத்தேன் !
ஆம் - பழம் துப்பாக்கி
ஒன்றின் குண்டொன்று
என் நெற்றியில் திலகமிட,
மரணித்து சரிந்தேன்
அச்சிறுவன் நினைவோடு !
ஒருவேளை நீங்கள்
எண்ணை காட்டில் வாழ
அனுமதிந்திருந்தால்...
ஒருவேளை அச்சிறுவன்
என்னிடம் விழாதிருந்தால்...
ஒருவேளை நீங்கள்
கூக்குரல் கொடாதிருந்தால்
ஒருவேளை எனக்கு
உங்கள் மொழி தெரிந்திருந்தால்
ஒருவேளை உங்களுக்கு
கொஞ்சம் இறக்கமிருந்தால்
நானும் உயிரோடிருந்திருப்பேன் !
காக்க வந்த என்ன
கத்தி பயமுறுத்தி
குண்டால் கொலைசெய்த
நீங்கள் - என் விந்தெடுத்து
பத்திரப் படுத்தியென்ன பயன் ?
என்ன குட்டிகளை
காடுகளுக்கனுப்பி
வாழ வைக்கவா போகிறீர் ?
உணர்வற்ற உங்களோடு
தொன்னூறு விழுக்காடு
மரபணு ஒத்திருப்பதற்காக
நான் வெட்கப் படுகிறேன் !
ஏழாம் அறிவை நோக்கி
நடைபோட வேண்டாம்,
உங்கள் ஆறறிவைக் கொண்டு
ஐந்தறிவின் உணர்வுகளையும்
புரிய முயற்சியுங்கள் !