எதற்காக தண்டனை

எத்தனையோ உன்படைப்பு
எதை சொல்லி உனை நான்
பெருமைபடுத்த
ஆயிரம் தான் இருந்தாலும்
அருகதை எனக்கேது?
உன்னை நானறிவேன்
உன் படைப்பில் நானொருவன்

மண்ணிலுள்ள உயிர்களுக்கு
முன்னோடி நீயன்றோ!
மனிதனுக்கு பின் தான்
மாயவனும் தோன்றியிருப்பான்
இல்லையென்றால்
அவனும் நீயும் ஒன்றுதான்
அந்த ஆதிமூலம் தான் அறியும்

பெற்ற தாயைப்போல்
பாசம் குறையாமல்
பேணி பாதுகாத்து
உணவுக்கும் வழிகாட்டி
உயிர் காத்த பெருமையெல்லாம்
இயற்கை அன்னையே—உனையன்றி
வேறு யாரால் முடியும்?

இயற்கையென பேரெடுத்து
இதயங்களில் வீற்றிருந்தும்
உனது படைப்புகளை
வேரறுக்கும் பாவிகள்
அணுவாயுதம், ஆழ்கடல் சோதனை,
தீவிரவாதமென—உனக்கு
தீங்கிழைத்தபோதும்

மனித ஜென்மங்களை
மன்னித்து வாழவிடு
உயிர்கள் அனைத்தும்
உன் படைப்பு என்பதால் அல்ல,
ஏது பாவமும் அறியாத
ஏனைய உயிர்கள்
எதற்காக தண்டனை பெறவேண்டும்?

எழுதியவர் : கோ.கணபதி (6-Jun-16, 10:05 am)
பார்வை : 104

மேலே