காலிப் படகு
.
மெத்தப் படித்தவொரு தத்துவ ஞானி
சத்தம் சந்தடி இல்லா இடந்தேடி
பத்துக்கு நாலு படகினை ஓட்டி
முத்திரை யோகம் செய்திட நின்றார்.
கடவுளை எண்ணி கண்களை மூடிட
படகினை அலைகள் மெல்ல தாலாட்ட
திடீரெனப் படகை எதுவோ இடிக்க
திறந்த கண்களில் மற்றொரு படகு
மோதிய முட்டாள் எவனெனும் கோபம்
பீறிடக் கண்களை சுழற்றிப் பார்க்க
கோபம் அவர்க்கு உள்ளே கனன்று
படகு இடித்த கணத்தில் வெளி வர
காலிப் படகது காற்றில் தவழ்ந்து
இடித்தது என்பதை அறிந்து கொண்டு
தத்துவ ஞானி தியானம் அதிலே
முத்திய ஞானம் கைவர முயன்றார்.
மீண்டும் அவரை இடித்தது படகு
இம்முறை அவரோ கண்ணை திறவார்.
இடித்தது காலிப் படகெனும் ஞானம்
வந்ததில் அவர்க்குக் கோபம் இல்லை.
எத்தனை முறை இடர்கள் வரினும்
காலிப் படகே செய்யும் இடரெனும்
தத்துவம் அவர்க்கு புரிந்தது அன்று
அத்துவித ஞானி அக்கரை சேர்ந்தார்.