வாழ்த்துப்பா
தம்பி வித்தக இளங்கவி விவேக்பாரதியின் முதல்சிறகு நூல் வெளியீட்டிற்கு
வாழ்த்துரை வழங்க அழைத்திருந்தார், வாழ்த்துப்பாவாக தாருங்கள் என்று அன்புவேண்டுகோள் விடுத்திருந்தார், அதன்படி நான் எழுதிச்சென்ற விருத்தப்பா இதோ
அன்புத் தம்பி விவேககவி
ஆசு கவி!ஆம் வேககவி
இன்பத்தமிழைப் பொழியுங்கவி
எளிமை யாக மொழியுங்கவி
கன்னித் தமிழின் மரபினிலே
கவிதை புனையும் இளங்கவியின்
மின்னுங் கவியை பார்த்திவரை
வித்தக இளங்கவி என்றனரே
எட்டைய புரமுண் டாசுகவி
இவருள் இருந்து பேசுங்கவி
கட்டிக் கொடுப்பார் மதுரகவி
கலியில் இவர்வித் தாரகவி
ஒட்டக் கூத்தர் விருதுகவி
(உ)வந்தே வாழ்த்தும் சித்ரகவி
மெட்டா வர்ண மெட்டுகவி
மீசை முறுக்கைப் பெற்றகவி
வட்ட மிடுஞ்சட் கோணகவி
வரைந்தாய் தாத்தா தந்தகவி
இட்டேன் கடக பந்தகவி
எனக்கே தந்தாய் அந்தகவி
கட்டிக் குளத்தா ரோடிணைந்து
கணித்தாய் உழவந் தாதிகவி
பட்டுக் கோட்டை போலகவி
பாடும் வித்தக விளங்கவியே
அன்னை தந்தை முதலுறவு
அன்பு தானே முதல்வரவு
கன்னித் தமிழே முதல்மொழியாம்
கவிஞா இதுவா முதல்சிறகு?
என்ன செய்யும் முதல்சிறகு
இணைத்த திங்கே நமையெல்லாம்
இன்னும் இன்னும் எழுதென்று
எழுதத் தூண்டும் முதல்சிறகு
இதுதான் உனக்கு முதல்சிறகா?
எடுத்துப் படித்தோர் அதிசயிப்பார்
புதுமை சிறப்பு ழகரப்பா!
புலவர் படித்தால் பிரமிப்பார்
எதுகை மோனை தருமியைபா
எழுது கின்றாய் மிகவியல்பா(ய்)
மதுமை சேர்த்து வார்த்தாயோ?
மனதை யெல்லாம் ஈர்த்தாயே
பயிலும் போதே நூல்படைத்தாய்
இதனைப் படித்தோர் நூல்படைப்பார்
பயிலுங் கவிப்பே ரரசினுக்கு
பாட மான அவர்கவிபோல்
பயிலும் உனக்கேக் கல்லூரிப்
பாட மாகி முதல்சிறகு
இயலும் இசையும் தரும்ஆம்ஆம்
இதுவே அடியேன் வாழ்த்தாகும்
அரங்கன் வாழ்த்தும் துணைவாழ்த்தும்
அகரம் அமுதன் கவிவாழ்த்தும்
அரங்க வாழ்த்தும் தாய்வாழ்த்தும்
ஆன்றோர் சான்றோர் அருள்வாழ்த்தும்
வரத ராச ஐயாவின்
வாழ்த்தும் நாளும் பலித்திடவே
விரித்தாய் இன்று முதல்சிறகு
விரிப்பாய் இன்னும் சிறகுகளே….
இந்த நூல்வெளியீட்டு விழாவில் பாவலர் ஐயா, கவிஞர் வெங்கடேசகோபாலன் ஐயா, கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து ஐயா கவிஞர்சேலம்பாலன் ஐயா,கவிஞர் கருணாநிதி இன்னும் பல பைந்தமிழ் சோலைச் பந்தங்களையும், எழுத்துச் சொந்தங்களையும் சந்திக்க்கும் வாய்ப்புக்கிட்டியது
மரபுமாமணி ஐயாவின் அன்பையும் அன்பளிப்பையும் மறவேன் மறவேன்
இதில்விசித்திரம் என்னவென்றால் முகநூலில் அவர் நட்புக்கிட்டிய நாள்
நான் அவரை நேரில் சந்தித்த நாளின் மறு நாள் ஆம்….
விழாவில் கவிஞர் விவேக்பாரதியின் கை,கால்களில் ஆறு விரல்களுடன் ஆக மொத்தம் இருபத்து நான்கு விரல்களுடன் பிறந்தாரம்
அதை வைத்தும் விருத்தம் அமைத்தேன் அங்கு பாடவில்லை இங்கே நம் எழுத்தில்
விருத்த அடியில் சீராறு
விரிநான் கடியில் நாலாறு
இருகை இருகால் விரலாறு
இதுவோ உனக்கு வரலாறு
தரும்நூற் கவிஞன் விரலாறு
தாத்தா சொன்ன வரலாறு
பெருமைக் குரிய பாட்டாறு
பேசுங் கவியே பாரதியே
இப்போது ஆறாவது விரலாய் எழுதுகோலை எடுத்துக்கொண்டாயே
வாழ்த்துக்கள் வித்தக விளங்கவி விவேக் பாரதி
அன்புடன்
சு.அய்யப்பன்