குழந்தைத்தொழிலாளர்
பஞ்சு போன்ற பாலகரை
_பண்ணை வேலை செயச்செய்தல்
நஞ்சு கக்கும் மனமுடையோர்
_நாசம் சூழ்ந்த செய்கையடா
புத்தகம் சுமக்கும் கைகளிலே
_பாரந்தனையே சுமக்கின்றார்
நித்தமும் இந்நிலை தொடர்ந்திடினே
_நிம்மதி என்பது நமக்கேதடா
பள்ளிச் செல்லும் வயதினிலே
_பணிக்கே அவருஞ் செல்கின்றார்
பள்ளிப் படிப்பைப் பாதியிலே
பறித்துக் கொள்ளும் அவலநிலையடா
ஆலை தன்னில் உழல்கின்றார்
_ஆண்டவன் செயல் இதுவென்றோ
சோலை தன்னில் விளையாடும்
_சூழல் அவர்க்கே வாய்ப்பதேதடா
குழந்தை தனையே பணிக்கனுப்பி
_குடும்பம் நடத்தும் பெற்றோரே
குழந்தை மூலம் பெறுஞ்செல்வம்
_குடும்பத் திற்கே இழுக்கானதடா
பள்ளிப் பருவந் தனையேதான்
_பாங்காய் அவர்க்கு அளித்திடுவோம்
பள்ளி வயதுக் குழந்தைகள்
_பணிக்குச்செல்வதைத் தடுத்திடுவோமடா
பள்ளிப் பருவந் தனையேயும்
_பாங்குடன் அவரும் முடித்திட்டால்
எல்லா வளமுந் தான்பெற்று
ஏற்றம் கொண்டே வாழ்ந்திடுவாரடா