ஏழையின் பாடல்

வாழ்க்கைச் சுவரிலே வறுமை ஓவியம்
கண்ணீராலே அழிந்திடுமோ
ஏழை குடிசையில் ஏற்றும் தீபமும்
தண்ணீராலே எரிந்திடுமோ
கடவுள் கருணை கடல்மேல் மழையை பொழிகிறதே
வயிற்றுப் பசியின் கொடுமை அதிலே நனைகிறதே.. (வாழ்க்கை)

வேலை தேடும் வேலை செய்தே
வீணாய் காலம் கழிகிறதே
வீட்டின் அடுப்புத் திண்ணை மேலே
பூனை சுகமாய் துயில்கிறதே
யானை பசிக்கு சோளப் பொறியும்
குதிரைக் கொம்பாய் இருக்கிறதே
பானை கூட அடுப்பில் குந்தும்
பசியால் நாளும் துடிக்கிறதே ..(வாழ்க்கை)

ஏற்றி வைக்கும் ஏணிகள் எல்லாம்
எட்டி உதைத்துப் போகிறதே
தீட்டி வைத்தும் புத்திக் கூர்மை
தினமும் மழுங்கிப் போகிறதே
உழைத்து வாழும் கனவுகள் காண
உறக்கம் வரவும் மறுக்கிறதே
கிழக்கில் நாளும் கதிரவன் உதித்ததும்
இருளே சூழ்ந்து கிடக்கிறதே (வாழ்க்கை )

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (15-Jun-16, 4:27 am)
Tanglish : yezhaiyin paadal
பார்வை : 169

மேலே