அவளே என் ஆசை ராணி
அதோ அவள் தலையை அசைத்து
அங்கே நின்று கொண்டிருக்கிறாள்,
புது மணப்பெண் போல பெருமிதம்!
அவள் கன்னத்தைத் வருட எண்ணி
ஆசையாய் அவளை நெருங்குகிறேன்,
முகத்தை முன்னே விருப்புடன் நீட்டுகிறாள்!
தடவிக் கொடுத்தால் முகமலர்ச்சியுடன்
ஆடாமல் அசையாமல் நிற்கிறாள்,
ஆசையாய்க் கனைக்கவும் செய்கிறாள்!
அவளைச் சாப்பிட அழைக்கிறேன்
துவளாமல் தொடர்ந்து வருகிறாள்,
என் தோளைத் தொட்டுத் தொடர்கிறாள்!
குளிக்க அவளை அழைக்கிறேன்,
ஆற்றுக்குச் செல்லலாம் என்கிறேன்,
அவள் முதுகில் அமரச் சொல்கிறாள்!
மணலில் புரளத் துடிக்கிறாள்,
மீண்டும் மீண்டும் புரண்டு எழுகிறாள் - பின்
குளிர்ந்த நீரில் நன்றாய் நீந்துகிறாள்!
அவள் கால்கள் மிக நீளம் – பந்தயத்திலே
அவள் முதலாய் முந்தி ஓடிடுவாள்,
அவளே என் ஆசை ராணி – என் குதிரை!

