முதிர் காதல்

முப்பது வருடமுன் என் நிலை:

தளிர் காதல், தவித்த காதல், தாளாத காதல்,
காத்திருந்த காதல், காக்க வைத்த காதல்,
குளிர் காதல், என்னை கொதிக்க வைத்த காதல்..

சில வருடங்களில்
வேண்டுதல்களில் காதல் வேண்டா வெறுப்பாய் காதல்
தொடச்சிணுங்கிய பின் தொட்டாச்சிணுங்கியாகி
தொலைந்து போன காதல்...!

இருபது வருடமுன் காதல் புனர்ஜன்மம் எடுத்த போது..

தாலியுடன் ஜொலித்த காதல், தேனிலவில் திகட்டிய காதல்
தோழமையில் தொடர்ந்த காதல்
என்னை நிதம் நிறுத்தி கேள்வி கேட்ட காதல்
தினம் தினம் பதில் வாங்கி வாங்கி பழகிய காதல்
பழைய பேப்பராய் ஒதுக்கி வைத்த காதல்
வாழ்க்கைப்பரீட்சையாய் பணமாய் காதல். பல்லைக்காட்டிய காதல்
வெயிலிலும் வறட்சியிலும் வதங்கி வாடிய காதல்....!

இதோ என் முன் இப்போது
கனவாய் காதல் கள்ளுண்டால் போதையில் தொலையும் நிஜமாய் காதல்
நிழலில் நிறைந்து வழிந்து நான் நிஜத்தில் தேடினால் நின்று முறைக்கும்

இந்த காதல் தானா
அன்று புதிதாய் புதுப்பித்தது என்னை, பின் பூவாய் கமழ்ந்தது?
தேனாய் இனித்தது, தெவிட்டாமல் சில காலம் சுவைத்தது.

இன்று மட்டும் ஏன் ஏனோ கள்ளாய் போனது, கசப்பாய் ஆனது?

வயசுக்கும் வயோதிகத்திற்கும் வலு இழக்காத காதல் வேண்டும்,
இனி எங்கே இந்த பிறவியில்....?, என்னால் முடியாது !..

மீண்டும் ஒரு முறை பிறந்து மறுபடியும் நான் காதலிப்பேன்..
அப்போது என் தேர்வு சிறப்பாக இருக்கட்டும்..
அப்போதாவது காதல் என்னை சரியாக தேர்ந்தெடுக்கட்டும், கடவுளே..!
என இப்போதே வேண்டிக்கொள்கிறேன்..!

எழுதியவர் : செல்வமணி (17-Jun-16, 11:45 pm)
Tanglish : mudhir kaadhal
பார்வை : 160

மேலே