வெண்தாடி வைத்த வேதாந்திகள்

வானவீதியில்
அலைந்து திரியும்
வெண்தாடி வைத்த
வேதாந்திகள்!.

மழையூரை..
பாலையூராய்…..
பாலையூரை
மழையூராய்…
மாற்றத் தெரிந்த
மந்திரவாதிகள்!

இது ..
திரவக் காசுகளை
மட்டும்
சேர்த்து வைத்திருக்கும்
திருப்பதி உண்டியல் !.

இவை..
நல்ல பிள்ளைகளைப் போல…
பூமித்தாய்
செலவழித்த
திரவக்காசுகளை
இரட்டிப்பாய்..
திருப்பித்தரும்.

இவை
மின்னல் சாட்டையடி வாங்கி
அழும் கண்ணீரே
நன்னீராய்..
பூமியை நனைக்கும்..

இவை..
பல் நூறு மைல்கள்
போகும் பறந்து.
போயிருந்து..
ஒவ்வொரு ஊருக்கும்
வைக்கும்
மழையெனும் விருந்து!.


இயற்கை அன்னை
தன் இடுப்பில்
சுமந்து வரும்
நீர் குடங்கள்…

குடிக்கக் கொஞ்சம்
நீர் கேட்டால்
நம்மை குளிப்பாட்டி விடும்
இந்த
தர்மக் கரங்கள்!.

தன்னிடம் உள்ளதையெல்லாம்
வாரி வழங்கி விட்டு
கடைசியில்
பரதேசியாய் போய்விடுகின்றன
இந்த
பரோபகார மேகங்கள்!.

செல்வந்தன் ஒருவன்
தானே கேட்டுப் பெற்ற
ஏழ்மை
இதுவா?

ஆம்..
இது..
சில மனிதர்களால் மட்டுமே
அடையக்கூடிய செம்மை
போன்ற கனவா..

நானிலம்
பயக்க வந்த நன்மை!

பெண்மை நலம்
கொண்ட
மேகங்களிடத்தில் தான்
எத்தனை
பேராண்மை!!

எழுதியவர் : பரதகவி (18-Jun-16, 12:51 pm)
பார்வை : 83

மேலே