அழகிய தமிழ் மகள்

அவனியில் ...

அன்பமுதே
அமுதவீரமே
வீரஅழகே - எம்
வெல்லும் தமிழ் ..!

அதுபோல் ;

அனைத்தும்
ஒருங்கே பெற்றாள் - என்
பைங்கிளியாள் ..!

* கணினியுகமும் - என்றும்
காலடி தொழுது நிமிரும்
தேன்கனியாள்..!

* அந்த
முக்கனியும் கசக்கும் - இவள்
வெட்கச்சிரிப்பில் ;

பிழை கண்டால்...

புறநானூறும் மிரளும் - இவள்
நெருப்பு விழியில் ..!

* என்
இதயமாய்
இருக்கிறாள் வம்புக்காரியாய் ;

சிறுக்கி ,

சில காலமாய்
இதமாய்க் கடிக்கிறாள்
வண்டுக்காரியாய் ..!

* சூரியகாந்தியிவள்
பார்த்தாலே போதுமே
கொதிக்குமே உலை - இதில்

இவளுக்கேன்
அறுபத்து நான்கு
தொழிற்சாலை ..?

* அரளி எனும்
அடைமொழியில்;

ரோசாப்பூ ஆடும்
விளையாட்டில் ,
நானும்
புது கலையோ ..?

* பயபுள்ள...

கரும்பு தின்னும் கொடுவாள் ;
கள்ளி ;
வயசுக்கு வந்ததால்
கவி "யாழ்' ..!

* ஏனோ ...
என்னிடம்
குறுநகை புரியும்
குறுந்தொகைதான் - அவ்வப்போது

முப்பாலும் மோகிக்கும்
பொதுமறைதான்..!

* இதோ...
இளவேனிற்காலத்து
இளநீரும் மோருமாய்
என்னுள் வழியும் ;

என் உறவுத் தமிழச்சியால்
ஏதேதோ நினைந்து
என்றென்றோ செத்து ;

பின்
காதலினால் துணிந்து ;

இன்று
களத்துமேட்டில்
வழிமறித்தேன் ;

கைப்பிடித்தேன் ;
இதழ் நெருங்கி ;
கண் பார்த்துப் பேசுகிறேன் ...

அன்பே...

தமிழ் கூறும்
நல்லுலகில் ;

வரம் நீ
தவம் நான்
வாழ்வு நாம்..!

நிலம் நீ
மழை நான்
விளைச்சல் நாம் ..!

உயிர் நீ
சுவாசம் நான்
காதல் நாம் ..!

அஃதே ...

பன்னிரு உயிரும் நீ
பதினெட்டு மெய்யும் நான்
பைந்தமிழ் நாம் ..!

இணைவோமே - வரலாற்றில்
இனிப்போமே ...

வாராயோ - என்னுயிரே
வாழ்வோமே ...

வற்றாத
காதல் தமிழுடன் ...!

சொல் - அல்லது
கொல்..!

எழுதியவர் : சுரேஷ் முத்தையா (18-Jun-16, 4:49 pm)
பார்வை : 112

மேலே