ஒரு நிமிடக்கதை - ஒரு மீனின் தேடல் நானே கடவுள்

கன்னியாகுமரி ஆழ்கடலில் ஒரு மீன்குஞ்சு இருந்ததாம்,
அது தன் சக நண்பர்களுடன் பாடசாலையில்
விளையாடிக் கொண்டிருந்தபோது சக நட்பு மீன் ஒன்று,

“டேய்! எல்லாரும் கேளுங்கடா!! எங்க தாத்தா நேத்திக்கு ஒரு கதை சொன்னாரு. அதுல பெரிய கடல்னு ஏதோ ஒண்ணு இருக்காம். அது ரொம்ப ரொம்ப பெருசாம். அத இதுவரையிலும் யாருமே பார்த்ததே இல்லையா. அதப்பத்தி பேசவோ நினைக்கவோ கூட முடியாதாம் டா!!!” என்றது வியப்புடன்.

அனைத்து மீன்களும் அந்த மீனைப்பார்த்து சிரித்து கேலி செய்தது.
“உன் தாத்தா நல்லா புருடா விட்ராருடா. உன்கிட்ட பொய் சொல்லி உன்னை நல்லா ஏமாத்திட்டாருடா” என்று கேலிசெய்தன.

ஆனால் ஒரு மீனுக்கு மட்டும் இதில் நாட்டம் அதிகம் இருந்தது. தன் தாயிடம் சென்றது அந்த குட்டி மீன். “அம்மா! கடல்னு எதோ இருக்காமே? உண்மையா?” என்றது. “அப்படித்தான் சொல்றாங்க. நான் பார்த்ததில்லை உன் தாத்தா கிட்ட போயி கேளு” என்றது அம்மா மீன்.

“தாத்தா கடல்னு எதோ இருக்காமே? உண்மையா?”.
“ஆமாம் பேராண்டி. உண்மைதான்.”
“தாத்தா. அப்போ கடலை நீங்க பார்த்ததுண்டா?”
“இல்லப்பா. ஆனா ஆர்க்டிக் பனிக்கடல்ல ஒரு சாமியார் மீன் இருக்கார்.
அவரை வேணும்னா கேக்கலாம். ஆனா அங்கெல்லாம் போகமுடியாது. ரொம்ப சிரமம்”
உடனே மீன்குஞ்சு புறப்பட்டது சாமியார் மீனைக்காண.

“ஹே சுவாமிஜி! மஹராஜ்!! குருதேவா!!! கடல்னு எதோ இருக்காமே? உண்மையா?”
“ஆம் குழந்தை கடல் இருப்பது உண்மைதான்”
“அப்போ சுவாமிஜி நீங்கள் அதை பார்த்ததுண்டா?”
“இல்லை மகனே! கடலின் தரிசனம் கிட்டவேண்டியே நான் ஐயாயிரம் ஆண்டுகளாக இங்கு தவம் செய்கிறேன்”
.
________________________________________________
.
என்ன சிரிப்பாய் உள்ளதா?.
நம் கதைதான் இது.
கடலுக்குள்ளேயே இருந்துகொண்டு, கடலின் ஒரு அங்கமாகவே இருந்துகொண்டு கடலின் தரிசனத்திற்கு ஐயாயிரம் அல்ல கல்பகோடி ஆண்டு தவம் செய்தாலும் காண முடியுமா?
இது அறியாமையன்றோ?

நாம் கடவுளைத்தேடுவதும் அவ்வாறே. நாம் கடவுளுக்கு அந்நியமாய் இருந்தால்தானே கடவுளை காண முடியும்?

மலை குகையிலும், கோவில்களிலும், தீர்த்தங்களிலும், இமயத்திலும் எங்கு சென்று தேடினாலும் உங்களுக்கு கட்டாயம் கடவுளின் தரிசனம் கிட்டப்போவதில்லை.

ஏனெனில் கடவுள் என்ற தனி ஒன்று இல்லவே இல்லை. இருப்பது அனைத்துமே கடவுள்தான்.
நாம் கடவுளின் ஒரு அங்கமாகவே இருந்துகொண்டு அவரை எவ்வாறு காண இயலும்?

முழுமையான இப்பிரபஞ்சத்திற்கு வைக்கப்படும் ஒரு பெயரே கடவுள் ஆகும். தவிர கடவுள் என்று தனியே யாரும், எங்கேயும் இல்லை.

ஈஸ்வரனும் விஷ்ணுவும் பிரம்மாவும் ஏசுவும் அல்லாஹ்வும் அனைத்தும் மனித கற்பனையே.

இருப்பது இரண்டுகளற்ற அந்த முழுமையே.
பிரபஞ்சம் முழுமை. நாம் அந்த முழுமையின் ஒரு அங்கம். ஆக நாமும் முழுமையே. ஜீவனாக நம்மை நாம் கருதுவதே அறியாமை.!!!

எழுதியவர் : செல்வமணி (19-Jun-16, 12:11 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 209

மேலே