வண்ண மயில் - முக நூல் கவிதைகள் தொகுப்பு 1

என் முக நூல் கவிதைகளின் தொகுப்பு...
இருட்டுத் தெருவில்
கருப்பு உடையில்
உருட்டிச் செல்கிறாள்
இருசக்கர வண்டியை
இறைவா காப்பாற்று...!
***
உங்கள் கவிதைகள்
படிக்கப் படிக்க
என் கவிதைகளில்
உங்கள் சாயல் தெரிகிறது...
என் கவிதைகளில்
தெரிகிறதா உங்களுக்கு...?
***
ஆதிக்கத்தை எதிர்த்து
கவிதை எழுதியவுடன்
அடங்கி விடுகிறோம்...!
அத்தனையும் சரியாகி
விட்டது.....
ப்ரச்சினையை விட்டு
எவ்வளவு தள்ளி
இருக்கிறோமோ
அவ்வளவு நல்ல கவிதை...(!)
***
காய் கறி வாங்க
கடைக்குச் சென்றேன்...!
தக்காளி ரூ 98
பீன்ஸ் ரூ 179
அவரை ரூ 120
விலைவாசி உயர்ந்திருப்பதால்
விலையை மட்டும்
வாசித்துத் திரும்பினேன்....!
என் கவிதைகள்தான்
விற்பனைக் கில்லை
காய் கறிகளுமா....?
***
அந்தக் குயில் ஓயாமல்
வெகு நேரமாகக் கத்திக் கொண்டிருக்கிறது....
பதில் குயில் இன்னும் காணவில்லை...
பாருங்களேன்...!
அதன் இடை விடாத சத்தத்தில்
இங்கு ஒரு பட்டாம் பூச்சி
சத்தமில்லாமல் கடக்கிறது....
***
கரு மேகங்களைக் கண்டு
தோகை விரிக்கும்
மயிலால்தான் மழை
என்பதில் மேகத்துக்குச்
சற்று வருத்தம்!
***
ஆதி நாளில்
வான வில்லின் வர்ணங்கள்
கரைத்து அந்த மயிலுக்கு ஏற்றிக்
கொண்டிருந்த போது
ஏக்கத்துடன் பார்த்தன
காகமும், குயிலும்.
----- முரளி