உன்னை நான் அறிவேன்
சோகமெனும் கடலுக்குள்
என் வார்த்தைகள்
செவ்வனே சிக்கிக்கொள்ள
ம்ம்ம் என்று சொல்லகூட
நா சிறிதும் நகராமல்
அடம்பிடிக்க உள்ளுக்குள்
குடைந்துகொண்டிருக்கும் வான் அளவு
வெறுமை அந்த வானையே
பார்க்க எத்தனித்தது....
இதுவரை இதுபோல்
பெரிதாய் நிகழ்ந்ததில்லை.....
இப்படி மௌனியாய்
மௌனத்திற்குள் கரைவதுகூட
சுகமில்லாத வலியுமில்லாத
தனி நிலை....
அந்த வானுக்கு தான்
எத்தனை தியாகம்
அத்தனையும் தன்னுள்
புதைத்து வைத்து வெண்ணிறமாய்
சிரித்து சிரித்து
மழுப்பி கொண்டிருந்தது......
என் கண்ணுக்கோ எத்தனை
அழகையும் கொட்டி குவித்தாலும்
உள்ளிருக்கும் வேதனை
குடைபோல் விரிந்து
என்னவனையே அந்த வானுக்குள்
துள்ளிகுதித்து விளையாடும்
மேகத்தில் வரைந்து காட்டியது.......
ஆம்! அவனே தான்
அழகாய் அவன் உடுத்தும்
அவனுக்கே உரித்த ஆடை கூட
சிறிதும் மாறாமல் தெளிவாய்
என் கண்ணுக்கு தரிசனம் தந்தது......
ஆனால் அவனை போலவே
அந்த மேகங்களும்....
சிறிதும் மாறவில்லை......
நிமிடத்துக்கொருமுறை கலைந்து கலைந்து
என்னமாய் விளையாடுது
அந்த வான மேடையிலே.....
அங்கும் அவன் முகமூடி
அவன் விளையாடும் கள்ள நாடகம்....
எனக்கு தான் நெஞ்சம் பொறுக்கவில்லை.....
அழவும் முடியாமல்
அடக்கவும் முடியாமல்
அப்பப்பா சொல்லிமாளா வேதனை......
நான் துவண்டு விழும் வேளையில்
உன் தோளும்
என் விழி நீர் கரைந்து விழும்
வேளையில் அதை தாங்க
உன் கரமும்-இதை இதை தானே
கேட்டேன்......இதுவொன்றும்
பெரிதில்லையே........இதெற்கெதற்கு
இத்தனை பெரும் தண்டனை.....
உன்னை உயிராய் நினைத்தவளின்
உடலே பெரிதாய் பட்டதால்
நீ செய்த காரியமா இது.....
உன்னை அறிந்தும்
ஏற்று கொள்ளாமல் உடைந்து
துடிக்கிறது என் இதழ்கள்.....
என்னவோ போ.....
இன்றும் புரியாமல் இருக்கிறாய்
உன் முகமூடி திரையை என்றோ
அறிந்திருந்தும் உன்னோடு அன்பால்
இழைந்து வழியும் என்னை
அறியாப்பெண் என்று......
உன்னை வெல்லபோவது நான் தான்
என்று உனக்கு புரியவைக்கவே
தினம் தினம் இந்த
மரண யுத்தம்,,,,,,,,,
அழுது களைத்த விழிகளை
அழுந்த துடைத்து கொண்டு
மீண்டும் ஒருமுறை
யாசிக்கிறேன்.......
என்னை நீயாகவும்
உன்னை நானாகவும்
நம்மை நாமாகவும்
வாழுமொரு வாழ்க்கைக்காக....