எல்லைகள்

எல்லைகள்


கனவின் எல்லை எது வரை ?

காலையில் விழித்து எழும்வரை.

நினைவின் எல்லை எது வரை?

நித்திரை நம்மைத் தொடும்வரை.

ஒளியின் எல்லை எது வரை?

கண்கள் மூடும் அதுவரை

அன்பின் எல்லை எது வரை?

யாரும் கண்டது இல்லை இதுவரை.



வானின் எல்லை எது வரை?

கடலை வானம் தொடும்வரை?

கடலின் எல்லை எது வரை ?

அலைகள் தொடும் கரை அதுவரை.

உடலின் எல்லை எதுவரை?

சுடலையில் எரிந்தழி யும்வரை.

அன்பின் எல்லை எது வரை?

யாரும் கண்டது இல்லை இதுவரை.



பொய்யின் எல்லை எது வரை?

உண்மை வெளியில் வரும்வரை

வெய்யிலின் எல்லை எது வரை?

நிழல் தரும் தருவின் அடிவரை.

மையலின் எல்லை எது வரை?

முப்பது நாள்முடி யும்வரை

அன்பின் எல்லை எது வரை?

யாரும் கண்டது இல்லை இதுவரை.



வித்தையின் எல்லை எது வரை - அதன்

உத்திகள் வெளியில் வரும் வரை

கத்தியின் எல்லை எது வரை? அதன்

கூர்முனை கேடயம் தொடும்வரை

புத்தியின் எல்லை எது வரை ? இறுதி

புத்தகப் பக்கம் அதுவரை

அன்பின் எல்லை எது வரை?

யாரும் கண்டது இல்லை இதுவரை.

எழுதியவர் : ரமேஷ் (கணித்தோட்டம்) (21-Jun-16, 6:08 pm)
Tanglish : ellaigal
பார்வை : 110

சிறந்த கவிதைகள்

மேலே