வயோதிகன்

நான் வயோதிகன்

கருமை பூசிய உடல்
கசக்கி வீசிய காகித முகம்
கருவிழி தொலைத்த கண்
இலையுதிர்கால சிரசுi
விளைந்த நெற்பயிர்போல
வளைந்த தேகம்.

தண்டுகாலின் துணை
தளர்நடை.
மொழிகற்கும் குழந்தை நா.

ஆம் நான் வயோதிகன்.

பஞ்சு திண்ண தலையணை
நஞ்சுபோன கட்டில்
கொசு குடியிருக்கும் போர்வை
வயதுசொல்லும் தம்ளர்
உளியில் சிக்கிய தட்டு.

ஆம் நான் வயோதிகன்.

நான் உணவு உண்ண ஈக்கள் உடனிருக்கும்
உறங்கும்போது கொசு கதை சொல்லும்
சிரிக்கும்போது குருவி கூடச்சிரிக்கும்
சிந்திக்கும்போது சிலந்திகள் பேசும்.
உலர்த்தாத ஆடையை ஒட்டடை துவைக்கும்.

ஒரேயறை ஒரே உலகம்
நான் வயோதிகன்.

மரணதேவன் என் வாசற்படியில்
தலைசாய்த்து
காத்திருந்து வெகுநாட்கள்
ஆகிவிட்டது.

எப்போதெல்லாம்
அவனால் என்கதவு தட்டப்படுகிறதோ அப்போதெல்லாம்
நினைவுகளைச் சுமப்பேன்.
நெஞ்சம் சற்று இளைப்பாறும்.

மீசை துளிர்த்த வயது
காதல் நுழைந்த பருவம்
நான் பூக்கள் சூட்டிய அவள் கூந்தல்.
கட்டிலில் நனைத்த காமம்
எட்டியுதைத்த இரும்புக்கதவு
முட்டித்தூக்கிய கல்
பிடித்து நிறுத்திய எருது
கடித்து திண்ற கரும்பு.

மரணதேவனே!!
சற்றுபொறு இன்னும்சிலகாலம்
இதே நினைவில்.............

எழுதியவர் : அ. ராஜா (21-Jun-16, 8:09 pm)
பார்வை : 54

மேலே