பண்ணையாரும் தலயும்

பண்ணையாரும் தலயும்
~~~~~~~~~~~~~~~~~
பண்ணையார்::
யாருங்க அது வீட்ல?

தல மனைவி:
அடடே! பண்ணையார் அண்ணவா..
வாங்கண்ணே..வாங்க..வாங்க..

பண்ணை:
எங்க மா தல?

த.மனைவி:
அவங்க சாப்டுட்டு இருக்காங்கணே..
நீங்க உள்ள வாங்க..
(உள்ளே திரும்பி)
என்னாங்க .. பண்ணையாரண்ணே வந்திருக்காங்க..
உக்காருங்கண்ணே நான் போயி காப்பி போட்டு எடுத்து வரேன்..

தல:
(சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை தூக்கிக்கொண்டு ஓடி வந்து..)
வாங்க..வாங்க .. பண்ணையார்.
என்ன இம்புட்டுத் தூரம்..
சொல்லியிருந்தா நானே வந்திருப்பேன்ல..
வாங்க..சாப்பிடலாம்..
(உள்ளே திரும்பி)
ஏம்மா.. ஒரு வாழையிலைய அருத்துகிட்டு வா..

பண்ணையார்:
இல்ல..இல்ல.. தல இப்ப தான் டிபன் சாப்டுட்டு வரேன்.. எனக்கு காபியே போதும்..தங்கச்சி காபி போட போயிருக்கு.. ஒரு வேலையா இந்தப் பக்கம் வந்தேன்..அதான், அப்படியே உங்கள பாத்துட்டுப் போலாமேனு வந்தேன்..(அப்படியே தலயையும் அவர் தட்டையும் பார்த்துட்டு ' கொஞ்சம் நேரம் இவர கலாய்ச்சா என்ன'என்று நினைத்துக்கொண்டு)
ஆமாம்.. தல இப்ப என்ன சாப்புடுறீங்க?

தல:
இட்லியும், தக்காளி சட்னியும்..

பண்ணையார்: ('அடப் பாவமே இத இட்லினு சொன்னா சட்னியும் நம்பாதே, இப்படியா பிணைஞ்சி சாப்டுவான் மனுசன்' என மனசுக்குள்ள நினைச்சிகிட்டு..)
சரி.. நேத்து நைட்டு என்ன சாப்டீங்க?

தல:
சப்பாத்தியும் , தக்காளி சட்னியும்..

பண்ணையார்:
அப்போ நேத்து மத்தியானம்?

தல:
சாப்பாடும், தக்காளி சட்னியும்..

பண்ணையார்:
ம்ம்ம்..நேத்து காலையில என்ன?

தல:
தோசையும், தக்காளி சட்னியும்..
(என்று சொல்லி விட்டு தல தலைய தூக்காம இட்லிய த.சட்னியில கொழப்பி ஃபுல் கட்டு கட்டிகிட்டு இருந்தார்)

பண்ணையார்:
(சற்று கடுப்பாகி கோபமாக)
யோவ்.! தல என்ன விளையாடுறீரா?
எப்ப கேட்டாலும் தக்காளி சட்னி,சட்னி,சட்னி.. என்னைய பாக்க எப்படி தெரியுது?

தல:
(பதறியபடி)..
அய்யய்யோ.. பண்ணையாரய்யா அப்படிலாம் இல்லீங்கோ.. உள்ளத தான் சொல்றேன்.. கோவப்படாதீங்க.. நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேட்டீங்கனா உங்களுக்கே புரியும் என் வேதன.. சொல்லட்டுங்களா..

பண்ணையார்:
ம்ம்..சொல்லுங்க..(என்று தன் கண்ணாடியை கழட்டி துடைத்து மாட்டிக்கொண்டார்)

தல:
அந்த வயித்தெரிச்சல ஏங்கேக்குறீங்க..
போன மாசம் நம்ம மாஸ்டர் வீட்ல ஒரு வீசேசம்னு நம்ம வீட்டுக்கு வந்து கூப்டாங்க..
சரின்னு.. நானும் எம்மனைவியும் அவங்க வீட்டுக்குப் போனோமா..
அங்க வீசேசம்லாம் முடிஞ்சி திரும்புறதுக்கு முன்னாடி நான் மாஸ்டர்ட்ட பேசிகிட்டு இருக்கும்போது இவங்க 'மாஸ்டர் வீட்டம்மா கிட்ட சொல்லிட்டு வந்துடுறேங்க'னு உள்ள போனவங்க..
அஞ்சி நிமிசம் ஆச்சு ஆள் வரல,
பத்து நிமிசம் ஆச்சு, பதினஞ்சி நிமிசமா...

பண்ணையார்:
(மறுபடியும் கடுப்பாகி)
யோவ்..எவ்ளோ நேரந்தான் ஆச்சு?

தல:
ஒரு அர மணி நேரம் ஆச்சுங்க..

பண்ணையார்:
இத மொதல்லையே சொல்ல வேண்டியது தான.. சஸ்பென்ஸ் வக்கிறாராம் சஸ்பென்ஸ்..
ஒழுங்கா சொல்லும்..

தல:
சரிங்கய்யா இனிமே ஒழுங்கா சொல்லிடுறேங்க..
அர மணி நேரமாச்சே ஆளக்காணோமேன்னு நானும் மாஸ்டரும் அவங்க வீட்டுக்குள்ள போனா...
அங்க ஒரு ஆளு ஒசரத்துக்கு ஒரு ஃபிரிட்ஜ் அது பக்கத்துல நின்னுகிட்டு யேவீட்டமாவும், மாஸ்டர் வீட்டம்மாவும் அந்த ஃபிரிட்ஜ் பத்தி பேசிகிட்டு இருந்தாங்க..
அப்பறம்.. நான் யேவீட்டம்மாவ கூப்டுகிட்டு வீட்டுக்கு வந்தேனா..
வீட்டுக்கு வந்ததுல இருந்து அந்த ஃபிரிட்ஜ்ஜ பத்தி தான் ஒரே புராணம்..
'அது அப்படி, இது இப்படி'னு தொனத்தொனனு(இங்க குரல குறைச்சி சொன்னாரு)
போட்டு கொடஞ்சி எடுத்துட்டாங்க. அப்பறம்
'ஒரு ஃபிரிட்ஜ்ஜ வாங்கி கொடுங்க'னு நச்சரிச்சதுல, நான் நேரா
நம்ம ஈகே வ பார்க்க.. அவர் அவருடைய
நண்பர் கடைக்கு நம்மல கூட்டிகிட்டு போயி ஒரு ஃபிரிஜ்ஜ அதாவது மாஸ்டர் வீட்ல இருந்த அதே ஒசரம், அதே நிறம்னு பாத்து வாங்கிட்டு வந்தாச்சு..

பண்ணையார்:
சரி..
நீங்க சாப்ட தக்காளி சட்னிக்கும், இந்த கதைக்கும் என்ன சம்மந்தம்..

தல:
அந்தக்கொடுமைய ஏன் கேக்குறீங்க சம்மந்தம் இருக்கேஏஏ..
ஃபிரிஜ் வந்த மறு நாள்ல இருந்து வாரத்துக்கு ஒரு முறை தான் கொழம்பே வைக்கிறாங்க..
இப்ப மூனு நாளா இந்த தக்காளி சட்னி தான் ஓடுது..

பண்ணையார்:
அடப்பாவமே..!

தல:
இதாவது பறாவாயில்ல போன வாரம் ஃபுல்லா ரசம் ஓடுச்சுங்கோ..

பண்ணையார்:
ச்சுச்சுச்சு.. அய்யோ பாவமே.. இது ரொம்ப கொடுமடா சாமி..
நல்ல்ல்ல வேள தல.. நீங்க சொன்னதுனால நா தப்பிச்சேன்..

தல:
ங்ஙே.. நீங்க தப்பிச்சீங்களா?
ஒன்னும் புரியலையே..!

பண்ணையார்:
ஒன்னுமில்ல...
நம்ம வீட்லயும் பண்ணையாரம்மா ஒரு ஃபிரிட்ஜ் வாங்கனும்னு சொன்னாங்க..
சரின்னு.. உங்கள பாத்து பேசி கூட்டிட்டு போலாம்னு வந்தாஆஆஆ..
நீங்க என்னடானா இப்படி சொல்றீங்க..
நல்ல வேள சொன்னீங்க..
இல்லனா நம்ம சுகரு பாடி தாங்காதுங்க..(என்று சொல்லிகிட்டு இருக்கும்போதே ஃபோன் பாடியது)
ஹலோ.. ஆ.. சொல்லுமா.. நான் இப்ப தல வீட்ல தான் இருக்கேன்.. ம்ம்..
சொன்னேமா.. அவர் பிரண்டு தான் கடை வச்சிறுக்காராம்.. ஆனா இப்ப அவரு ஊர்ல இல்லையாம் வர ஒரு மாசம் ஆகுமாம்.. அதானால அவரு வந்தவுடனே வாங்கிக்கலாம்னு சொன்னார்மா..ம்ம்..ம்ம்.. ஆமா..ஆமா..
தலயே தான் சொன்னாரு.. சரிமா..
நான் வச்சிடுறேன்..

தல:
(ஒன்னு பேசமா தேமேனு பண்ணையாரையே முழிச்சி.. முழிச்சி பாத்துகிட்டு இருந்தார். தல மனைவி காபி எடுத்துகிட்டு வந்தாங்க).

தல மனைவி:
இந்தாங்கண்ணே.. காபி எடுத்துக்குங்க.. அண்ணி குழந்தை எல்லாம் எப்படி இருக்காங்க கேட்டதா சொல்லுங்க..

பண்ணையார்:
ம்ம்ம்.. எல்லாம் நல்லாயிருக்காங்கமா..
போனதும் சொல்றேன்..
அடுத்த வாரம் பையன் பிறந்த நாளு வருது.. புள்ளைங்கள கூப்டுட்டு வாங்க மா.. என்ன தல சரியா?
சரி மா .. நான் கிளம்புறேன்.. தோட்டத்துல கொஞ்சம் வேலை இருக்கு..
(தலய பார்த்து) அனுபவி ராஜா அனுபவி (என பாடிக் கொண்டிருக்கும்போதே மறுபடியும் ஃபோன்) ஆஆ..சொல்லுமா.. இல்ல..இல்ல
நான் நம்ம தோட்டத்துக்குப் போயிட்டு அப்படியே மதியம் சாப்பாட்டுக்கு வந்துடுறேன்.. சரி.. மத்தியானம் என்ன பதார்த்தம்.. (திடீர்னு அதிர்ச்சியாக)
என்னாது தக்காளி சூப்பும், தக்காளி சட்னியுமாஆஆஆஆஆஆஆ..

பேந்த பேந்த முழிச்சிகிட்டு இருந்த தல இப்ப பண்ணையார பார்த்து கிகிகிகி இளிக்க ச்சேய்.. சிரிக்க ஆரம்பிச்சிட்டாரு..

(ஊசிக்குறிப்பு:- இந்த கதை சிரிக்க மட்டுமே..
ஃபிரிஜ்ஜ தாயாரிக்கிறவங்களையோ, விக்கிறவங்களையோ குறை சொல்ல இல்லை.. யாரு மனக்கஷ்டம் படாதீங்கோ..
__ இவண்
ஃபிரிஜ்ஜால் பாதிக்கப்பட்டோர் சங்கம்..
எங்களுக்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன..டொய்ங்..டொய்..டொய்ங்)

விஜயகுமார் வேல்முருகன்

எழுதியவர் : விஜயகுமார் வேல்முருகன் (25-Jun-16, 1:44 pm)
பார்வை : 171

சிறந்த நகைச்சுவைகள்

மேலே