நுங்கம்பாக்கம் ரயில் நிலையம்

நுங்கம்பாக்கம் ரயில் நிலையம்
அருகில் உள்ள மருத்துவமனையில்,
ரவி தன் குழந்தையின் வரவுக்கு
வாஞ்சையோடு காத்து நிற்கிறான்.

கதவு திறந்து,
தம்பி! தம்பி!! உனக்கு
சரஸ்வதியே மகளா வந்திருக்கா...
அதிர்ஷ்டசாளி! என்றாள் நர்ஸு.

மகளை கையிலேந்தி,
குபு குபுவென பொங்கி வரும்
கண்ணீரை கண்கூட்டிற்குள் அடக்கி,
சிரிக்கிறான் ரவி.

அதிர்ஷ்டத்தை ஆளாக்கித் தந்த
அம்மாவான மனைவியை தேடி ஓடுகிறான்...

மரண வலியை வதம் செய்த
சாந்த சொரூபியாய் காட்சி தந்தாள் கனகா!

வாரியணைத்து, முத்த மழையிட்டு,
நன்றிகள் பல கூறி,
இரு தேவதைகளையும் தன் அடுக்ககத்திற்கு
அள்ளி வந்தான்.

ரவிக்கு, கண்முன் தெரியாமல் செய்யும் செலவுகளை,
சமாளிக்கும் அளவு சம்பளம்.
இருவரும் மெத்தப் படித்திருந்தால்,
அறிவுரைக்கு ஆள் தேவைப் படாததால்,
பெற்றோர்களை, பெரியவர்களை தங்களோடு
வசிக்க மறுத்துவிட்டனர்.

வசிக்க அழைத்தாலும்,
சென்னை போன்ற சூனிய
தேசத்தில் வாழ்க்கையை ஓட்ட
பெரும்பாலும் கொங்கு மண்டல
விசுவாசிகள் விரும்பிலார்.

ரவியும் கனகாவும் அளவற்ற பாசமும்,
நிறமாறாத நேசமும் ஊட்டி வளர்த்தனர்.

இளவரசிக்கு மூன்று வயது,
படு சுட்டி, பார்த்தாலே கொஞ்சம்
வம்பிழுத்து, கொஞ்சிப் போகச் சொல்லும்
குழந்தைத் தன்மை.

இளாவின் வயதை ஒத்த,
கவினின் குடும்பம் எதிர் பிளாட்டை
சொந்தமாக்கி குடி புகுந்தனர்.

ஐடியில் வேலையாகவே,
அயலராகிப் போயினர் இவர்களைப்
பெற்றெடுத்தோர்.

இளாவிற்கு பிடித்தது,
பார்பி பொம்மைகள்,
டெடி பொம்மைகள்,
அழகு சாதனப் பொருட்கள்.

கவினோ, சண்டை வீரன் பொம்மைகள்,
கார், பைக் வண்டிகள்,
துப்பாக்கிகள், வீர தீர சூர பொம்மைகள்.

இருவரும் ஒட்டியே இருக்க
ஆசைப்படும் எதிரிகள்.

தினந்தோறும், நூறு முறை
சண்டையிட்டு பிரிவர்,
பல நூறு முறைகள் கவினின்
சமாதான உடன்படிக்கையை
முறியடிப்பாள் இளா.
பின்பு கூடுவர்.
திரும்பவும், அழகழகாய் அணிவகுத்திருக்கும்
பார்பி பொம்மைகள் மீது,
கண்டைனர் லாரி கொண்டு மோதி
கலவரம் ஏற்படுத்துவான் கவின்...

இப்படியே பல ஆண்டுகளோடி,
வளர்ந்துவிட்டனர்...

ஒன்பது வயதான இருவரும்,
சேர்ந்து விளையாடுவது குறைந்துவிட்டது.

கவின் வீட்டினுள்ளே,
பிஎஸ் 3 யோடு நிதம் நிதம்,
போர் புரிந்து, எதிரிகளை சாய்த்தும்,
குத்துச் சண்டைகளில் பதக்கங்கள் வென்றும்,
கார் பந்தயங்களில் பரிசுகள் வாங்கியும்,
துப்பாக்கிகளால் துரோகிகளின் மார்பை துளைத்தெடுத்த படி
துரு துறுவென திரிந்துகொண்டிருக்கிறான்.

இளாவோ மொபைலிலும்,
லேப் டொப்பிலும்,
பெண் பொம்மைகளை அழகுபடுத்தியும்,
வண்ண வண்ண லிப்ஸ்டிக் போட்டும்,
பல வகை நெயில் பாலிஷ் இட்டும்
அடைந்து கிடந்தாள்.

ரவியும் உயர் பதவியடைந்தான்,
கனகாவும் முப்பத்தி ஐந்து வயதானத்தை
அறுபது ஆகிவிட்டதுபோல் நினைத்து
மன அழுத்தத்தின் பிடியில் மாட்டி இருந்தாள்.

இளா செய்யும் எந்த செயலையும்
அப்பாவிடம் சொல்லி மகிழ ரவியால்
நேரம் ஒதுக்க முடியாததால்,
இளா பேசுவதை குறைத்துக் கொண்டு,
கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லும்
ரோபோட்டாய் மாறிப் போனாள்.

அம்மாவிடம் மட்டும்,
அளவுக்கு அதிகாகமாய் பகிர்ந்து வந்தாள்.

ஒரு ஞாயிறு காலை,
தினசரி நாளிதழில் திடுக்கிடும் செய்தி,
பார்த்தவுடன் கவினின் அப்பாவிடம்
பகிரவேண்டி கவினின் வீடடைந்தான் ரவி.

இரு நான்காம் வகுப்பு மாணவர்களுள்
ஏதோ சண்டை, அது முற்றி போக,
பள்ளி வளாகத்தில் ஓடி ஓடி சண்டையிட்டு கொண்டிருந்தனர்.
இருவரில் பயந்து போன ஒருவன் பள்ளி கழிப்பறியினுள் புகுந்து
தாழிட்டுக் கொண்டான்.

ஆத்திரம் அடங்காத இரண்டாமவன்,
குவிந்து கிடந்த செங்கல் கற்களை,
எடுத்து கழிப்பறை கதவு மேல்புற வழியே,
வீசி எரியத் துடங்கினேன்.

ஒன்றன் பின் ஒன்றாக,
வீசிக் கொண்டே இருந்தான்,
வலி தாங்காத உள்ளே இருந்தவன்,
கத்தி அழுகிறான், கதறுகிறான்,
அப்படியும் கோபம் குறையாமல்
சாகும் வரை கல்லால் அடித்து தாக்கி
உயிர் போகச் செய்திருக்கிறான்...என்ற செய்தி ...!

கேட்ட கவினின் தந்தை,
என்ன கொடுமை இது?
ஏன் இப்படி நடக்கிறது?
என்று விவாதிக்க....
தொலைக்காட்சியின் சத்தம் விவாதத்தை
இடைமறிக்க.....

வரவேற்பறையில் இருந்த தொலைக்காட்சியை,
பார்த்துக் கொண்டிருந்த கவினின் அனுமதியின்றி,
அனைத்து விட்டு பேச்சை தொடங்கினர்.

டமார்!!! என்ற ஒரு சத்தம்.
என்னவென்று திரும்பினால்,
சில்லுச் சில்லாய் ஏதோ ஒன்று தரையில்
சிதறிக் கிடந்தது.

டிவி அணைக்கப் பட்ட கோபத்தால்,
கவின், ரிமோட்டை சுவற்றில் வீசி எரிந்து உடைத்திருந்தான்.

ஏன் டீவியை நிறுத்தின, சொல்லு? சொல்லு?
ஏன்? ஏன்? ஏன்?
என்று கூறியபடி
ஆ! ஆ! என்று அலறுகிறான்.

இதை பார்த்த கவினின்
அப்பாவும், அம்மாவும் பதறி ஓடோடி,
வாரியணைத்து,
சாரி டா செல்லம்,
வெரி சாரி டா பட்டுக் குட்டி என்று
தூக்கிக் கொண்டு படுக்கை யறைக்குள் சென்று விட்டனர்.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்,
கூ! கூவென்று ரயிலொன்று கடக்கும் சத்தம்
மெதுவாக கேட்டு மறைந்தது....

கவினின் ஓ! ஓ! வென்று அடங்காத சத்தம்
மட்டும் குறையவே இல்லை.....!

மௌனமான ரவி,
வீட்டை விட்டு வெளியேறினார்.........!

எழுதியவர் : கணேஷ்குமார் balu (25-Jun-16, 4:27 pm)
சேர்த்தது : Ganeshkumar Balu
பார்வை : 474

மேலே